Saturday, December 4, 2010

காதல் நம்பர் : 123 ( One hundred and twenty third love )

KarurPrabha@anaathaikathalan


ஒரு தடவை தான் காதல் வரும்!
என்று எவன் சொன்னான் ? 

சேறு சகதிகளைக் கடந்து தான் 
ஆற்றுநீர் கடல் சென்று சேர்கிறது! 

சேற்றுக்குள்ளேயே சிக்கி 
இருப்பவர்களுக்குச் - சின்ன 
ஆற்றோடு முடிந்து விடுகிறது 
காதல்! 

ஆற்றைக் கடந்து அடியெடுத்து வை ! 
அன்புக் கடல் பெருசு நண்பா! 

ஆயிரம் வசனம் ஊருக்குத் தெரியும் 
அது பேசிக்கொண்டே தான் இருக்கும் ! 
விட்டுவிடு !

உன் வசனத்தை நீயே எழுது ! 
உன் வீணையை நீயே வாசி ! 

மற்றவரின் பேச்சுகளின் மேல் 
தூக்கி வைத்திருக்கிற 
உன் அன்பையும் காதலையும் 
இறக்கி வைத்து நீயே சுமந்து செல் !!  

எந்தத் தோளில் உன் அன்பை 
இறக்கி வைக்க முடியுமோ ! 
அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !! 

ஆயிரம் காதல் கூட தவறில்லை!! 
ஆசைக்கு ஏங்காமல் 
அன்பிற்கு ஏங்கும் வரை!

Tuesday, November 30, 2010

ஒரு கோப்பைக் காதல்

KarurPrabha @ anaadhaikathalan

என் ஒரு கோப்பை நெஞ்சிற்குள் 
உயிருக்கும் உணர்வுக்கும் 
உனக்கும் சண்டை !

உயிரையும் உணர்வையும் 
தூக்கி எறிந்து விட்டு 
கோப்பைக்குள் நிறைகிறாய் நீ ! 
 ஆம் ! எல்லாம் நீயாக ! 

போதும்! இது போதும்!
நீயே நெஞ்சான பின் 
இதற்கு மேல் என்ன எழுத ?

உயிரற்று உணர்வற்றுநான் 
ஒன்றுமேயற்றுப்  போனாலும் ,

உன்னை உணர எனக்குத் தெரியும்,
என்னை உணர உனக்குத் தெரியும் 
நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
இது பத்தாதாடி அழகி ??    

Thursday, November 25, 2010

காரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்


அப்ப  நான் உனக்கு புதுசு அழகி !
பழகிய கொஞ்ச நாட்களிலேயே
என் வரையரைற்ற அன்பிற்குக்
காரணம் கேட்டாய்  !

அப்போது கவிதையும் தெரியாதா எனக்கு ! 
எனவே
வார்த்தைகளையும் காரணத்தையும் 
தேட வேண்டி இருந்தது !

தேடியதும் சொன்னேன்!
"எங்கிருந்தோ வருகிற 
ஊர்பேர் தெரியாத காற்று 
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா 
உன்னை வாழ வைக்கிறது ? 
"நானும் காற்று தான் அழகி ! 



Thursday, November 11, 2010

கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்


தோழியின் மீது காதல் !
தொலைந்து போனது 
தாய்மொழி வார்த்தைகள் !

தொலைவில் அவள் 
சென்றிடக்கூடுமென்று  
மறைந்தே கிடக்கிறது 
மனதிற்குள் அன்பு !

 சொன்னால் விதி  
என்ன ஆகும் ? 
சொல்லாமல் என் அன்பு 
எங்கு போகும் ?

ஒளித்து வைப்பதும் குற்றம் ! 
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் ! 
எங்கு தான் போகும் 
அனாதையான அன்பு ?

யாரேனும் கடவுளைப் பார்த்தால் 
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக் 
கேள்வி கேட்கவேண்டும்!

Sunday, October 31, 2010

வழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு




யுகங்கள் தோன்றி மறையும் !


நாகரிகம் வளர்ந்து சுறுங்கும் !


மனிதர்கள் பிறந்து மடிவர் ! 

'முரண்பாடு' என்னும்
முதலிலேயே எழுதி 
வைக்கப்பட்ட விதியில் 

நீயும் நானும் 
ஒருபொருள் சுமந்த இரு வரி அழகி !
அவ்வளவுதான்!

நாம் ....

பிறந்தோம் வாழ்ந்தோம்,  
வாழ்ந்துவிட்டு மறைவோம்! 

இடையில்...?

இருவரும் சேர்ந்து விதியில்
ஒரு வரி மட்டும்  எழுதினோம்! -
அதுதான் காதல்  

நம் இருவரின் காதலும் 
சேர்ந்து ஒரு கவிதை எழுதியது - 
அது அன்பு !

இப்படி ,
நிலையில்லா மனிதவாழ்வில் 
என் நித்தியமெல்லாம்
உன் அன்பிற்காக மட்டும் வாழ்வது 
எத்தனை பெரிய வரம் அழகி !


முத்தம் அன்பே சொல்லும் !


உன்னை முத்தமிட்டதாய் 
கவிதை எழுதுகிறேன் ,

கவிதையில் பொய் எழுதுவதை 
அப்போது மட்டும் 
நிறுத்தி வைக்கிறேன் .!

என் பொய்களை  ரசிக்கிற உலகம் 
ஏனோ உண்மையை படித்து 
முகம்  சுழிக்கிறது !

அப்போது தான் நினைத்தேன் :
பேசாமல் நமக்கு வயசு 
ஏழாகவோ , இல்லை எழுபதாகவோ  
இருந்திருக்கலாம் ! 

நம் முத்தத்தின் ஈரத்தில் கசிகிற 
அன்பை மட்டும் உலகம் கவனித்திருக்கும் ! 

சரி விடடி., 
முத்தத்திற்கு அர்த்தம் - " அன்பு " என்று சொல்பவனுக்கு 
மட்டும் நம் காதல் கண்டிப்பாய் புரியும் அழகி ...!

L o v e y o u  s o m u c h d i !


விலை : ஒரு பெருமூச்சு


அழகி !
மௌனங்கள் நூறுநொடி ,
வார்த்தைகள் ஆயிரம் கோடி ,
எண்ணங்களும் நினைவுகளும் ,
எண்ணற்ற என்னினைப்பும் ,
எனக்காக நீ கொடுக்கும் 
வரங்களும் சாபங்களும் !
என் பெருமூச்சை 
விலைவாங்கிக் கொள்கிறதடி ! 

Thursday, September 30, 2010

அன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்!


காற்றும் கனவும் 
களவாடிய-அப்  பொழுதினில்
தெரிந்தோ தெரியாமலோ 
இழந்திருக்கிறேன் .,
உனக்காக நான் எழுதிய 
எத்தனையோ கவிதைகளை !  

ன்பு ராஜ்யத்தின் 
அழகு நீதியரசி - நீ !
அகப்பட்டேன் உன்கவிஞன் 
கூண்டில் குற்றவாளியாய் !

மன்றாடி நின்றேன் ! 
மன்னிக்கக் கேட்டேன் !

ன்பொருட்டு எனை 
மன்னித்தும் 
அவள் பொருட்டு என்மேல் 
சினந்தும் எழுதினாள்
இரண்டு தீர்ப்பு !

தீர்ப்பு ஒன்று : 
( The World's most lovable judgement i ever heard)

அணைத்தாள்! ஆர்ப்பரித்தாள்! 
அருகில் வந்து சொன்னாள் ....

விடு பிரபா..

"எழுதத் தெரியாதவன் தான் 
தொலைத்ததைத் தேடிக்கொண்டிருப்பான் என்றாள் !"

அடேயப்பா !
எவ்வளவு உண்மையான தீர்ப்பு !!

தீர்ப்பு எண் இரண்டு : 
 ( The worlds Most beautiful Imprecation i ever heard of)

சினந்தும் சிவந்தும் போன 
தாமரையாள் 
அழுது முடித்தொறு
சாபம் சொன்னாள்!
 
" என்னை எழுதித் தொலைத்தவரே! 
இன்று முதல் நீங்கள் 
என்னைத் தவிர வேறெதையும் 
எழுதப் போவதில்லை !" என்றாள்

பெண் சாபம் பொல்லாத சாபம் தான் ! 

ஆயிரம் தமிழ் தெரிந்திருந்தும்!
அழகி!.....
உன்னை எழுதும் போதும் தான் 
வார்த்தைகள் கவிதைகள் ஆகிறது..!!

Tuesday, September 21, 2010

என் முதல் காதல் கடிதம் :


நிலவின் மடியில் நிரந்தர ஜீவனாம்சம் கேட்டு ஒரு பேராசைக்காரன் எழுதுவது. நலம், நல செய்ய 
ஆவல் ..!
  
நகரும் நொடிகளை விட்டு நகராமல் நிற்கும் என் நினைவுகள், கொஞ்ச நாட்களாய் உன்னோடு சுற்றி திரிகிற விசை நீ சுவாசிக்காத உண்மை..!  எங்கெங்கோ பார்த்திருக்கிறேன்! எங்கோ தூரத்தில் நின்றிருக்கும் உன் அசைவுகளை எல்லாம் நான் ரசிக்கத் தவறிஇருக்கிறேன்  (இருட்டுக் கனவில் மட்டும்) ! 

எல்லா அழகையும் எட்டிப் பறித்த பூவைப் போலிருக்கும் மின்மினிப் பனிமலரே.. என்னழகி..   

நான்கிரண்டு வாழ்கை பொருத்தமும், நானும் நீயும் ஒரே சாதியும் , கட்டும் முறையோ கிராமத்து சொந்தமோ எல்லாம் இல்லை எதுவுமில்லை ..!  அப்படிக் கணக்குப் போட்டுக் காதலிக்கும் அன்பும் எனக்கு  பழக்கமே இல்லை .!  

உன் தேவைகளை என் ஆசைகளாக்கிக் கொள்ளத் தெரியும்...!! அவ்வளவு தான்!  

வேறெந்தத் தகுதியும் என்னிடம் இருப்பதாய் பெருமை பேசப்போவதில்லை நான்! 

 நீ அழகி ! நான் ????.... நான் அதை ரசிப்பவன்!... அவ்வளவே! 

எவ்வளவோ மீறியும் ஒரே  ஒரே ஒரு பேராசையை மட்டும் இதயத்தில் ரொம்ப நாட்களாய் ஒதுக்கியே சேர்த்து வைத்திருக்கிறேன்! ஆம்..,  

உன் பெயருக்குப் பின் என் பெயர் போடும் ஆசைதான் அந்தப் ( பெயர்  + ஆசை ) பேராசை !   

பேராசை தீர்க்கும் நூறுபிறை மதியே , அழகி...!! என் வார்த்தைகள் பிடித்திருப்பின் உன்னோடு இதை பத்திரப் படுத்திக்கொள்! வாழவும் பிடித்திருப்பின் என்னையும் சேர்த்துப் உன்னில் பத்திரப் படுத்திக்கொள்!! முடிந்து போகும் புள்ளியாய் இல்லாமல் தொடர்ந்து நீளும் தொடர்ப்புள்ளிகளாக விழைகிறேன். உன்னுள் !  முடிவில்லாத அன்பினை  பதிலாகவும்  எதிர்பார்க்கிறேன்! கசக்கிப் போட என் அன்பு ஒன்றும் காகிதப் பூவில்லை என்று அசட்டுத்தனமாக நம்பும் அன்பான தலைக்கணம் கொண்டவன் நான் ..!! 

என் எதிர்பார்ப்புத் திசுக்கள் யாவும் எதிர்காலம் உன் தோளில் தான் என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் சொல்கிறது ! 

  (ஒரு வேல என்னய கிண்டல் கிண்டல் பண்ணுதோ ? சரி இருக்கட்டும் !) சேதிக்கு வருவோம்!  

ஊருலகில் நிறைய காதல் கடிதங்கள் அனாதைகள் ஆக்கப்படும் சேதியை நீ படித்திருப்பாய் ! நம் பிள்ளைகளாவது இந்தக் கடிதத்தை படித்துப் பெருமிதம் கொள்ளட்டுமே!  

உண்மையான அன்பு , நிராகரிக்கப் படுவது நிசமான பொய்தானென்று  !! 

Love you azhagi ....!!

Tuesday, September 14, 2010

அகர அகராதியில் காதல்


ந்தமில்லா மெய்யுறைந்த 
அர்த்தமுள்ள ஆதியே 

ர் தந்த என் அத்தனை சுவாசமே, 
அழகி!

ன்றைக்கு இன்னொடியில் 
இதயத்தில் உதிரமாகத்தான் 
என்றைக்கோ எங்கிருந்தோ 
 வந்து சேர்ந்தாயோ வான்மதியே!

இருமதி சுமந்த
புருவத்தின் நிழற்குடைக்காரி !

டனோ ஏழையோ 
இந்தப் பித்தன் எப்படியோ ,
பிரபா ,
இன்பன் நீஎன்றால் 
ஈராட்டி நானென்றாய்! 

மையவள் தேவிஎன் 
அழகிநீ பார்வதி !

னைவந்து மேவியது
ஏ ழுசென்மப் புண்ணியமோ !?

கித்தேன் உனைதினமும்
ஒருநொடியும் விடவில்லை !

உயிர்மெய்யின் ஊசிவேரில்
ஒவ்வோரிடமும் நீதானே ..!!

கினன் எழுதிய எழுதாக்கிளவியே !
அன்பிற்கும் அழகிற்கும் 
அத்தனைக்கும் நீதாண்டி!!

சிநீ! என்னவள் நீ !
 எதைநான்சொல்வேனோ 
அதைநீயும் சொல்லிடுவாய்!

துநீ ! ஐஞ்ஞைநீ!
ஐந்தாம் வேதம் 
காணாத அழகி நீ!

ட்டினர் எல்லாம் 
போற்றிடும் பெண்மைநீ !
ஒப்பில்லா ஒருமதிநீ 
உண்மையான அன்பழகி!

தியுரைந்து வேண்டினாலும் 
ஒருநூறு உலகம் தேடினாலும் ,
ஒருவர்க்கும் எட்டாத அன்புசாமி - நீ!

எனக்குமட்டும் கிடைத்த
என்னழகு செல்லக் கிறுக்கி!

வியம் பேசாதோர்
யார்தான் எவர்தான் !
அழகு தேசத்து மகராணிநீ! 
அடியேன் கிறுக்கன் 
என்னைப்போய் காதலித்தாய்!

தாவது  என் அன்பு செய்தப் புண்ணியம் !
  
* * * * * * * 
    அகராதி :   
* * * * * * *
 ர் - காற்று ,

டன் - பணக்காரன் , செல்வந்தன்

இன்பன் - கணவன் ,
 
ஈராட்டி - மனைவி  ,

மேவியது -ஆசைப்பட்டது ,

ஊகி - எண்ணுதல் , நினைத்தல்

ஊசிவேர் - ஆணிவேர்  (rootlet),

கினன் - பிரம்மன்  (lord brahmma),

எழுதாக்கிளவி- வேதம், 

சி- கிளி (parrot),

ஐது, ஐஞ்ஞை- அழகி, (beauty),

வியம் - பொறாமை,

Wednesday, September 1, 2010

அழகி எழுதிய முதற் கவிதை

 ஏற்றமும் இரக்கமும்
மாற்றமும் வேண்டாம்

கோடியும் லட்சமும்
கொஞ்சமும் வேண்டாம்

சதையில் வேண்டாம்
சிவப்போ வெளுப்போ

சாதியிலும் வேண்டாம்
உயர்வோ தாழ்வோ

ஆறடி நீயோ
அரைஒன்று குறையோ

எப்படி இந்நொடி
இருக்கிறாய் நீயோ

அப்படி வேண்டும்
அத்தனை பிறப்பும் !

அரண்மனைப் பிறப்போ,
அனாதைப் பிறப்போ

எங்கு எப்படி
என்னிலை நானோ

எல்லாம் இழப்பேன்
எல்லாம் இழப்பேன்

சோறு வேண்டாம்
சுகம் வேண்டாம்

சொந்த பந்தம்
ஒன்று வேண்டாம்

அன்பு போதும்
அது போதும்!

எத்தனை பிறப்போ 
அத்தனை பிறப்பும் - நீ

அழகி அழகி
என்-றழைப்பது போதும்

அன்புக்கிருக்கா  
அழகுக்கிருக்கா .,

உன்னுடன் இருப்பது
நொடியோ நிமிடமோ
வாரமோ வருடமோ

ஒருசுகம் போதும்- நீ 
ஒருவனே போதும்

உன் தோளில் 
வெண்ணிலவாய்
உனக்கொருத்தி
நான் போதும் ..!!

என்நெஞ்சில்
ஒன்றோடொன்றாய்
உறவாட ஒரு சேய்
நீ போதும் பிரபா ...!!

Thanx for your wonderful lines azhagi..!!

Sunday, August 29, 2010

அன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ்

பிறவிப்பயனை பெறாமல் நோகும்   
என் ஆட்காட்டி விரலில் - சுட்டி 

அழகி இவள்தான் ,
என் அழகி இவள் தான் என்று 

கேட்கிற அனைவரிடமும் 
சொல்லி மகிழ வேண்டும் 
போல இருக்கிறது ..

ஆனால் உன்
அன்புக்கட்டளைக்குள் 
அடைபட்டுக் கிடக்கிறேனே
அழகி .,

ஏன் ? நீ என் ' பொண்டாட்டி ' 
என்பதைத் தவிர 
வேறு எதையும் யாரிடமும் 
சொல்ல வேண்டாம்
என்று தடுக்கிறாய் ?

ப்ச்ச்ச் ....!!! போடி  .!

 ஒன்று மட்டும் நிச்சயம் அழகி !

இயற்கையின் அழகிற்கு ...
 நம் காதல் - 
ஒரு முன்னேற்ற மயில்கல்.!

ஊருக்கு சொல்லமுடியாமற் போன   
நம் அன்பின் உன்னதமோ 
இயற்கையின் அழகை 
குறுக்கிட்டு மறிக்கும் 
 மதில்சுவர் தடங்கல் ..!!


Tuesday, August 24, 2010

ஒரு வேப்பங்குச்சி உயிர்பெறுகிறது


சம்பவம் நிகழ்ந்த இடம் : திருச்சி மலைக்கோட்டை இரயில் நிலையம்   

நேரம் : ஒரு மணி வண்டிக்கு ஐந்து நிமிடம் இருக்கிறது !


"ஊரெங்கும் முடிந்து விட்டதாம் 
அரங்கேற்றம்! என்னை
உயிரெடுக்க வந்துவிட்டது
காற்று "

என்று புலம்பிக் கொண்டிருந்தது 
மரநிழலில் ஒடிந்து கிடந்த 
ஒற்றை வேப்பங்குச்சி!

என்னைப் பார்த்ததும் அது
மண்ணை ஈரமாக்கி 
மேலும் அழ ஆரம்பித்தது..

அட நிறுத்தடி! கிறுக்குபய குச்சியே,
என்று சொல்லிக்கொண்டே புழுதித்  
தரையில் அமர்ந்தேன்.!

விதி ஒடித்த தன் நிலையை   
வேதனையாய்க் கதை சொன்னது ..!!

எல்லாம் விதிதான் எதற்கிந்தப் புலம்பல் ?
விடுவிடுவென ஆறுதல் சொல்லி 
விறுவிறுவென 
ஏந்திய குச்சியில் 
கட கடவென எழுதி முடித்தேன் 
மண்ணில்!

"அழகி " 
என்று உன் பெயரை 
அழகு  கொஞ்சமும் குறையாமல்..!
அப்பாடா..!
வேப்பங்குச்சியின் விதி 
புதுபிக்கப்பட்டது!
உன் பெயரெழுதிய காரணத்தால் 
அது 
என் மர(அலமாரியில்)   
பொக்கிசமாக்கப் பட்டது ! 



DESTINY is that which tries to DIVIDE us!

DIVINE LOVE is that which dies to UNITE us!

Saturday, August 21, 2010

இல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்

பிரபா ..
எனக்காக ஒரு கவிதை சொல்லேன் 
என்று கேட்டாய் நீ!

திடீரென்று கேட்டதால் 
திக்குமுக்காடிப் போனேன் நான்!

( சரி எதாச்சும் மொக்க போடுவோம்)..

சொல்கிறேன் கேள்!

ஒன்றும் ஒன்றும் இரண்டென்றேன்!
சரி என்றாய் !

இரண்டும் இரண்டும் நான்கென்றேன்!
சரிசரி என்றாய்!

நான்கும் நான்கும் எட்டுடி நாயே என்றேன் 
செல்லமாக!

"பிச்சுபுடுவேன்" என்றாய் அதற்குமேல்
செல்லமாக!

எட்டும் எட்டும் எத்தனடி என்று கேட்டேன் !
பதினாருடா பண்ணி என்றாய் !

முடிந்து போனது கவிதை 
முத்தம் கித்தம் தர்றது 
என்று கேட்டேன்!!

முரட்டுப் பார்வையில் 
சிரித்தே சிதறடித்தாய்!
எனக்கு 
முன்னூறு முத்தம் 
பெற்றதைப் போல் இருந்தது!

 இப்படி கிறுக்குத் தனமாய் 
கவிதைகள் எழுதுவது நான் மட்டும் தான் என்றால்
கிறுக்குத்தனத்தில் உறைந்து கிடக்கும்
அத்தனை காதலையும் 
உணரக்கூடியவள் நீ மட்டும் தான் அழகி .!

Tuesday, August 17, 2010

அன்புக்கோழை -அழகியின் நினைவில்

 அழுகிற முகமெலாம்
கோழைத்தனத்தின் முகவரி தான்!
யார் இல்லையென்றது ? 

நாம் அருகிலிருந்த நொடி எல்லாம் 
காற்றில் தூசியாகி கைவிட்டே போய்விட்டது.!
நகர்கிற நிசிகளில் தூக்கமென்பது 
தொடரும் பகல் கனவாகி விட்டது.!

தொலைவுகள் கடத்திசென்ற அழகியின் குரல் 
அரைமாதத்திற்கு  ஒருமுறை கேட்கிறது!
"கிறுக்கா.! .....
என்று தொடங்கும் அந்த வீணையோசை
எனக்கே தெரியாமல் என் கண்களை அறுத்து
இதயத்தை கோழையாக்கிவிடுகிறது..!!!

ஆம்.!
அழுதுவிட்டேன்! அன்புக்கோழை .!
என்னசெய்ய நான் ?

உப்புக்கண்ணீரும்  உனக்காக அழும்போது
இனிக்கத் தானே செய்கிறது! அழகி!
 

Friday, August 6, 2010

சாதிகள் வாழ்கிறது ! சாவதென்னவோ அன்புதான்!


விடியல் தொடங்கி முடியும் இரவு வரை 
வெள்ளைப் பெட்டிக்குள் என் 
உலகமே உறைந்து கிடக்கிறது !

செயர்க்கைகோள் விளையாட்டில் 
சிகரமே அடைந்து கிடக்கையில் நம் 
சேர வஞ்சிக்கு மட்டும் விதிவிலக்கோ அழகி ?

நன்றாகவே தெரிகிறது நீயும் நானும் 
வாழ்ந்துகொண்டிருக்கும் தெருத்தடம்!

கூகுள் மேப்சில் இத்தனை ஊரிருக்க 
குற்றமென்று நம் அன்பை சொன்ன 
இந்த ஊரிலா நாம் பிறந்திருக்க வேண்டும்?

சாதிகளும் சண்டைகளும் இல்லாத 
ஊரினில் பிறந்திருக்கலாம் .,
சாகும் போதும் உன் 
மடியினில் கிடந்திருப்பேன்.!

அரிவாள்கள் அன்பை எதிர்க்கும் கொடுமை 
எந்த ஊரினில் இல்லையோ அங்கு
பிறந்திருக்கலாம் நாம்..!!
அறுபது ஆண்டடுக்கு பிறகு
வரலாறாகி இருக்கும் நம் அன்பு .! 

மானம் மரியாத சாதி சனம் 
கோத்திரகுலமேன்று 
சேற்றினில் கலக்க படுகிறதே ..!! 
செந்தாமரைக் காதல்கள் .!
அது இல்லாத ஆயிரம் ஊரினில் 
ஏதாவது ஒன்றினில் பிறந்திருக்கலாம்..!

மத்திய அரசு வேலையும் 
மாதம் முப்பதாயிரமும் போதும்!
மாப்பிள்ளை தங்கமாமே.!??

காசும் பணமும் இல்லையெனில் 
காதலும் குணமும் பித்தளையாம் ..!
ச்ச்ச்சீ !
இந்தக் கன்றாவிகள் இல்லாத ஊரினில்
நாம் பிறந்திருக்கலாம்!

ஆணும் பெண்ணும் கைகோர்த்து நடந்தால் 
ஆட்டம் போடுது பார் " சிறுசுகள் " 
என்கிறார்கள் - அந்தச் 
சிறுசிலிருந்து வந்தப் பெருசுகள் .,
சில்லறைத்தனமாக பேசும் பேச்சுக்கள் நம்
செவிகளுக்கு எட்டாத 
ஏதாவது தேசத்தில் பிறந்திருக்கலாம்!

சதை உணர்விலா அன்பு-அது 
இது எனத்தெரிந்திருந்தும் 
சவுக்கிலடித்துப் பிரித்துவைக்கும் 
சாதிகள் இல்லாத நாட்டில்   
சோறு தண்ணி இல்லையெனினும் 
பரவாயில்லை .!
ஒருநாளேனும் வாழ்ந்துவிட்டுச் 
மடிந்திருக்கலாம்.!
கணவன் மனைவியாய் !

சாதிச் சுடரில் ஒளிர்கிறது இந்தியா !!
சப்தமில்லாமல் எத்தனையோ 
காதல்களை சாகடித்து !  

Tuesday, August 3, 2010

உதவாக்கரைக் காதலன்

ஒன்றை  .,
எதற்குமே உதவப்போவதில்லை 
என்று தெரிந்திருந்தும் ,
சிலசமயம் "அது வேண்டும் " என்று 
குழந்தைத்தனமாய் கேட்பாய்..!

நன்றி அழகி !

உன் குழந்தைத் தனத்தினால் 
வாழவைக்கப்பட்ட பலவற்றுள் 
நானும் ஒருவன்!

என்னையும் நீ அப்படித்தானே 
கேட்டாய்!
" பிரபா., நீ வேண்டுமென்று ! "


Saturday, July 31, 2010

அழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட!

உன்னை என்றுமே
மறக்கப் போவதில்லை !!
 
என்று நான் எத்தனை
பொய்க்கவிதை எழுதினாலும்
நீ படித்துவிட்டு பிடித்திருக்கிறது
என்று தான் சொல்லப்போகிறாய்!
 
இப்போதாவது நிசம்
என்னவென்று கேள்! !
 
உன்கூடவே இருக்கவேண்டும்
என்ற என் ஆசை ஒன்றும்
கடைசி வரைக்கும் இல்லை அழகி ! !
 
நாளை, நிலவும் சூரியனும் வானிற்கு
அழகு சேர்க்கப் போவதில்லை
என்று சேதி வரும் நாள் வரைக்கும் மட்டுமே!!
 

Wednesday, July 28, 2010

ஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..

ஆறு பில்லியன் உயிரினங்களில் இல்லாத 
எந்த அம்சத்தை நீ சொந்தமாக்கிக் கொண்டாயோ...?
என் அத்தனை துடிப்புகளும் உனக்காக மட்டுமே 
தொடங்கி முடிகிறதே அழகி...!!

Friday, July 23, 2010

ஒரு ஊஞ்சலின் புலம்பல்!

உயிருக்குள் உணர்வாகவும் 
உணர்வுகளுக்குள் உயிராகவும்
என் விதிக் கவிதையில் 
கடைசி வரை நிலைக்கப் போகும் 
முற்றுப்புள்ளியே ! 
என் முழுநிலவு அழகியே! கேள்..!!

நீயும் நானும் ஊருக்கு தெரியாமல்
ஓடிபிடித்து விளையாடிய இடத்திற்கு 
நெடுநாட்களுக்கு பின் 
நேற்றுதான் சென்றிருந்தேன்!

ஆலமர விழுதில் 
அன்று யார் முடிச்சோ?
அந்த ஒற்றை ஊஞ்சல்
வாழ்வதற்கு பயந்து 
தொங்கிவிட்டது கயிற்றில்!

உயிரில்லாத ஊஞ்சல்களின் 
அருகில் நின்று பார்த்தேன்!
லேசாக அசைந்த ஊஞ்சல்., 
தான் உயிரோடிருக்கும் சேதியை
என் செவிகளுக்குள் 
காற்றாகிச் சொன்னது..!

காற்றில் அசைந்த கட்டை ஊஞ்சல் 
என் நினைவுகளை இடித்து 
சட்டைக் காலரை பிடித்துக் கேட்டது..!

என்மடியில் அவளும் 
அவள் மடியில் நீயும் அமர்ந்து 
அழகு சேர்த்த நாட்களை 
எங்கே தொலைத்துவிட்டாய்?
"எங்கடா உன் அழகி..??" என்றது ..!

ஊஞ்சலின் கால்களில் வீழ்ந்து 
அவள் பாதச் சுவடுகள் அன்று 
உதைத்த மணல்களின் மடியில் 
இருவரி எழுதிவிட்டு எழுந்தேன் ....!

மன்னித்து விடு ஊஞ்சலே..! 
உன் கேள்விகளுக்கு!
என்னிடம் மௌனத்தில் கூட பதில் இல்லை..!    


Sunday, July 18, 2010

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம் !
சாத்தியம் தான் 
என்று என்னோடு 
சண்டை போடுகிறது  மனம் ! 

நம்மை சுற்றி இருக்கும்
உலகம் இன்னும் அழியத்
தொடங்கவில்லை!

நம் இதயம் ஓய்ந்து 
நிற்கப்போகும் நொடியும் 
ஒன்றும் அருகிலில்லை!

இப்பவும் உன் கண்களைப் 
பார்த்த நொடியில் 
அழுகை வரும்!

அடுத்த நொடியிலேயே 
என்னை சிரிக்க வைக்க 
உனக்கும் தெரியும் ! 

ஒருகையில் என் கண்களைத் 
துடைத்துக்கொண்டு 
மறுகையால் உன் 
கைகளைப் பிடித்துக் கொண்டு,

உன்னைக் காதலிக்கிறேன் என்று
சொல்வதற்கு நேரமிருக்கிறது!

"நீதான் இல்லை"

"எல்லாம் இருந்தும் எதுவுமில்லை " 
என்ற பழமொழிக்கு .,
அர்த்தம் தெரிய வைத்தமைக்கு
 நன்றி! அழகி !