Sunday, February 16, 2014

கடலோரக் கவிதைகள்


பிரியத்தின் பேரழகி !

இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக் கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நினைத்துக் கொண்டு பேசாமல் அலைகளின் சப்தத்தில் அமிழ்ந்து போகவேண்டுமென நினைத்தேன் . உன் நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் நேற்றைப் போன்ற இரவில் என் ஏகாந்தம் எத்தனை விஷம் கூட்டிக் கொள்கிறது தெரியுமா. 

இந்தக் கடல் நம் காதலைப் போன்றே எவ்வளவு பெரிய சக்தி தெரியுமா அழகி ... இந்தக் கடல் தான் நம்பிக்கை இழந்த மனிதனின் கடைசி நம்பிக்கை. இந்த அலைகள் தான் மரணிக்கப் போகிற மனிதனை திரும்ப வாழச் சொல்லி நிர்பந்திக்கும் கடைசி ஈரம். இந்தக் கடல் தான் எனக்கும் எல்லாமே. கடல் மணலுக்கு ஒரு சக்தி இருக்கிறது. உயிரைக் குளிர்விக்கிறது. கடற் காற்றுக்கு ஒரு சக்தி இருக்கிறது. காதலை, காதலரை எங்கிருந்தாலும் தூக்கிக் கொணர்ந்து கடற்கரையில் ஜோடியாய் உலாவ விடுகிறது. அலைகளுக்கொரு சக்தி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் மறக்கமுடியாத அன்பை மட்டும் நினைத்துக் கொண்டு கண்மூடிக் கொஞ்ச நேரம் அலையின் விளிம்பில் கால் நனைத்துப் பார்க்க வேண்டும். அப்போது புரியும் அலைகளின் தெய்வீகம் ! அலைகளில் ஒரு ஆசீர்வாதமிருக்கிறது. அலைகளில் நமக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. பாறைகளும் ஏதோ சொல்ல எத்தனிக்கின்றன. இறுகிப் போன மனங்கள் ஈரம் சேர்த்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவென பாறைகள் நனைந்து கொண்டே என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றன.

அலையும் கடலும் பாறைகளும் காற்றும் என்னிடம் இப்படி என்னெனவோ பேசிக் கொண்டிருந்தன. நான் உன் பெயரை திரும்பத் திரும்ப அலைகளுக்குச் சொல்லி கொண்டிருந்தேன். அலைகளும் என் கால்பிடி த்துத் திரும்பச் சொல் திரும்பச் சொல் என்பதைப் போல் கேட்டுக் கொண்டிருந்தன. நிற்காமல் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

சந்தன மணலில் உட்கார்ந்து கொண்டு ஆகாயத்திலிருந்து ஊற்றிய நீல நிறத்தில் பறந்து விரிந்திருக்கும் கடலைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். கடலின் மௌனமும் சரி. அலையின் சப்தமும் சரி. எனக்கே எனக்கு மட்டும் சில கவிதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தன. எப்போதாவது நீயும் நானும் சேர்ந்து அக்கடலில் கால்நனைக்கும் போது உனக்கு மட்டும் அக்கவிதைகளை காதில் சொல்லித் தருகிறேன் பிரியத்தின் பேரரசே...

அந்தக் கடற்கரையில் ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் குழந்தை ஓடி ஓடி பச்சை வண்ணச் சங்குகளை மட்டும் சேகரித்து மடியில் வைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் கணவரும் மகனும் அவருக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்றதுமே நானும் எழுந்து போய் கடல் ஈரம் காயாத சங்குகளை எடுத்துக் கொணர்ந்து ஓரிடத்தில் கொட்டினேன். என்னோட வந்திருந்த ஒரு தோழியும் எனக்கு உதவிக் கொண்டிருந்தாள். இரண்டு மூன்று நிமிடங்களில் உன் பெயரெழுதி அதன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன். பள்ளி நாட்களில் வீட்டுக்கழைத்துப் போக அம்மா வருகையில் சளிப்பிடித்திருக்கும் குழந்தை ஒன்று ஐஸ்க்ரீம் வேண்டுமென அடம் பிடிக்கும் காட்சி ஏனோ என் நினைவில் உரசிப் போனது. நீ வேண்டுமென நினைக்கிற ஒவ்வொரு நேரமும் இப்படி குழந்தையாய்த் தான் ஆகிப் போகிறேன் அழகி. என்ன ஒன்று... அழுவது தான் இல்லை. சிரித்துக் கொண்டே உன்னைக் கேட்கிறேன். தரப் போகும் அம்மாக்களும் ஐஸ்க்ரீம்காரர்களும் என்ன தரப் போகிறார்களோ. ஹ்ம்ம் !

நேற்று காதலர் தினத்தின் பரிசாக "உங்க அழகிக்கு என்ன கொடுத்தீங்க பிரபா?" என்ற கேள்வியை ஐந்தாறு தோழர்களிடம்/ தோழிகளிடம் இருந்து கேட்டேன். இங்கிருந்து உனக்காக நான் தொட்டனுப்பிய மூச்சுக் காற்றும் அங்கிருந்து எனக்காக நீ தொட்டனுப்பிய மூச்சுக் காற்றும் தான் எப்போதும் நாங்கள் பரிமாறிக் கொள்கிற பரிசு என்று சொல்லி முடித்தேன். இன்றுனக்கு நிஜமாகவே ஒரு பரிசு தரவேண்டும் போலிருக்கிறது அழகி... ஒன்றல்ல நூறு.. உன் பெயரெழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட சங்குகளை ஒரு பையில் போட்டு எடுத்து வந்திருக்கிறேன். என் பிரியத்தின் நூறு வண்ணமும் பச்சை. காதலிக்கு என்னெனவோ கொடுத்துக் கொண்டிருக்கும் தேசத்தில் நான் உன் பெயரெழுதிய கால் கிலோ சங்கை அள்ளிக் கொண்டு உனக்குத் தருவது வேடிக்கையான வேடிக்கை தானே அழகி !? இருந்தாலுமென்ன. உனக்குப் பிடிக்குமென்று தெரியும். பிரியத்தின் பொருட்டு நான் அள்ளிக் கொணர்ந்தவை இந்தச் சங்குகள். என்றாவது உன்னை நேரில் பார்க்கும் போது உனக்குத் தருகிறேன். உன்னோடு வைத்துக் கொள்வாய் தானே ?

ப்ரபா,
15 பிப்ரவரி 2014

Sunday, September 29, 2013

திருக்கோயில் கவிதைகள்

Dedicated to my one and only Pristinely beautiful soul, Azhagi !
Thanks for Loving me like anything.Without you. I am completely nothing di.

Prabhakaran Cheravanji( Karur Prabha)


காற்றில் கலந்தடிக்கும் 
தூசிக்குள்ளொரு துரும்பு நான் !
கடலும் கடல் தாங்கும் நிலம் தொடங்கி 
நிலாத் தாங்கும் விண்முற்றும் 
விடாமல் இன்னும் விரியும் பால்வெளியும் 
அதற்கப்பாலுமிருக்கும் 
அத்தனையும் நீ !
அன்பைக்காட்டிலும்
அகிலத்தைக்காட்டிலும்
தெய்வமென்னும் திருவைக்காட்டிலும்
ஆகப்பெரிய சக்திநீ !
என் உள்ளிருந்து ஆட்சி செய்யும்
இன்பப் பேரொளி !எல்லா மழையும்
கைகோர்த்துக் கொண்டு
யாருக்கும் தெரியாமல்
என்மேல் விழுந்து புரண்டு
எழுந்து முத்தமிட்டுக்
கட்டியணைத்துக்
கொஞ்சம் தள்ளிவிட்டுப் பின்
வம்பாய் இழுத்துக்
கைபிடித்துக் கொஞ்சியெந்
தோள்களில் முகம் புதைத்துக்
காதலித்துக் கொண்டிருக்கையில் ...
திடுமென விதிவந்தழைத்து
வருகிறேன் வருகிறேன்
என்றென் பெயர் மட்டும் ஓருமுறை
சொல்லிப் பின்
எல்லா மழையும் காற்றைப் பிடித்து
வானேரிச்
சென்றென்னை ப் பார்த்துச்
சிரிப்பதைப் போலிருக்கிறது

கோவிலுக்குச் சென்றிருந்தேன் ...
ஆசைதீர என் சாமியைப்
பார்த்து வந்தேன்...
கொட்டியது மழையா அன்பா
தெரியவில்லை !
எந்த சப்தமும் இல்லை...
இதயமெங்கும் நனைந்து கிடக்கிறது !
இனிப்பாய் இனிக்கிறது இந்த இரவு !தெற்கே போகும் காதல் ரயில்:
------------------------------
தெற்கே போகும் 
ராத்திரி ரயிலின் 
ஜன்னலின் வழியூடுருவி
இன்றிரவெல்லாம் என்னை
முத்தமிட்டுக்
கொஞ்சப் போகிறது
உன் வாசம் சுமந்த
நேசப் பெருங்காற்று !

கருப்பு வானம் சிவந்து வந்தால்
உன் கால்பட்டு வாழும் மண்ணில்
கண் விழிப்பேன் !

அப்பப்பா ...!
என் அன்புக் கோவிலின்
அழகு சாமியைக்
கைப்பிடித்துப்
பேசப் போகிறேன் !

அஞ்சு நிமிஷமானாலும்
அவள் நெஞ்செனும் வரக்குளத்தில்
மூழ்கிப் போவேன் !

ஒரு நேரம்
கைப்பிடித்தாலும்
ஒரு ஜென்மத்துக்கான
காதலையும் கண்ணிலே
சொல்லிடும் மாயக்காரியின்
விழி பார்த்துக் கிறங்கப் போகிறேன் ...

ஊருக்குப் போகிறேன்...

வழியெங்கும் கடக்கிற மரமெல்லாம்
காற்றெல்லாம் கட்டிடமெல்லாம்
இன்றிரவு மட்டும்
காதல் வண்ணம் பூசிச்சொலிப்பதை
ரசித்துக் கொண்டே
ரயிலில் போகிறேன் !

ஊருக்கு ! ஊருக்கு !


வரங்கள் எளிதாய்க் கிடைத்து விட்டன ! 
யார்க்கும் தெரியாமல் 
எனக்கே எனக்காகக் கொடுப்பதற்கு 
ஒரு சாமி இருந்தது ... 
சாமியை எப்படி யார்க்கும் தெரியாமல் 
வரமாய் வாங்கிக் கொள்வது ? 
அவளுக்கும் தெரியவில்லை 
எனக்கும் தெரியவில்லை ! 

நாம் சந்தித்துக்கொள்ளும்
கோவிலின் பிரகாரத்தில்
பின்னொருநாள் நானில்லாமல்
நீ மட்டும் நடந்து செல்கையில்
சட்டெனக் காற்றில்
புகைகிளப்பிச் சாமி வந்து
இப்படிக் கேட்குமோ?
உன் சாமி இங்கிருக்கிறேன் ...
உன்னை சாமி என்பானே
அவனைக் காணோம் !? உன்னை 
அறிந்திருப்பதும் 
உன்னால் 
நேசிக்கப்படுவதும் 
என்னை
மன்னனாக்கி
மகுடம் சூட்டி
மலர்ப்பாதையில்
பொற்தேரில்
பவனி போகச் செய்கிற
ராஜ வாழ்க்கை !
இது ராஜ வாழ்க்கை !
To Exist here, and
Being in the hands
of a Pristinely Beautiful
Princess of love ,
I'm Colossally blessed to
feel god by a tender touch
and crowned all the way
down the lane of life.
speechlessly Blessed !
#திருக்கோயில்_கவிதைகள் 

#பிரபாகரன்_சேரவஞ்சி

Thanks for the Pic : Arun Titan , Arun Titan StudioThanks James Peter Christie , Chitti Photogr@phy, for the beautiful pic ! 
••
திருவிழாக் கூட்டத்தில் 
உன்னைக் காண முடியாமல் 
தவிக்கும் நிலை எந்தச் சாமிக்கும்
வந்து விடக் கூடாதென்றே
கொஞ்ச நேரம் உன்னைத் தோளில்
தூக்கி வைத்துக் காட்டிக் கொண்டிருப்பேன்
தெய்வங்கள் தானெனினும்
தேவதைகளைத் தொழ விரும்பாதா என்ன?
••
#பிரபாகரன்_சேரவஞ்சி
நீ சாமி ! 
உன்னைக் கடக்கும் 
எல்லோரும் 
ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் ! 
நான் ' தங்கச் சிலைத் திருடன்' 
எல்லா பாதுகாப்பையும் மீறி 
உன்னைத் திருடும் வழியில் 
தினம் தினம் 
தொலைந்து போகிறேனே ஒழிய 
வழி தெறிந்த பாடில்லை ! 

நிறைய பாதைகள் 
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு.. 
ஒருமுறை போ என்று 
சொல்லிப்பாரேன்... 
எந்தெந்தப் பாதையிலோ 
எத்தனையோ வழிகள் கடந்து 
எங்கெங்கோ சுற்றித் திரிந்து 
கடைசியில் உன்னிடமே 
வந்து சேருவேன் ! 
எனக்குத் தெரிந்த 
பாதையும் பயணமும் இதுதான் ! 
அந்தக் கல்லில் உறைந்திருக்கும் 
சாமி என்மேல் 
கோபித்துக் கொண்டாலும் சரி ... 
அவள் முன்நிற்கையில் 
அவளைத்தான் கும்பிடக் 
கைகள் எத்தனிக்கின்றன ... 
நானென்ன செய்ய ? 
பொய்யாய் கடவுளைத் 
தொழ எண்ணமில்லை... 
போய்ச் சேர்ந்தாலும் சரி 
நான் வணங்கிய 
கடைசிச் சாமி 
அவளாக இருக்கட்டும் ! 
அதிலொரு நிம்மதி இருக்கிறது ! 

#பிரபாகரன்_சேரவஞ்சி
பெரிய ஊரிலில்லாத காதலா 
உன் காதல் என்று 
கேட்பவர்களுக்கு.. 
உன் சிரிப்பைத் தின்றுநான் 
எப்படி வாழ்கிறேனென்று 
தெரிந்திருக்க வாய்ப்பில்லை அழகி ! 
பாவம் ! 
அவர்கள் ஒன்றுமறியாதவர்கள் ! 
விட்டுவிடலாம்... கடவுள் நம்பிக்கை உண்டா 
எனக் கேட்பவர்களிடம்
 'உண்டு' என உரத்த குரலில் 
பதில் சொல்வது 
கொஞ்சம் கோவிலுக்குப் 
போகும் தைரியமும் 
நிறைய நீயிருக்கும் 
நம்பிக்கையிலும் தான் ! 
#திருக்கோயில்_கவிதைகள் ..


 #பிரபாகரன்_சேரவஞ்சி

பெண் குழந்தை 
தேவதை 
தோழி 
காதலி 
என்றெல்லாம் 
என்னருகில் சுற்றித் திரிந்தவள் 
என் கைப்பிடித்து நடக்கையில் 
கடவுளாய் உருமாறினாள்... 
அடக்கவுளே ! 
இது சாமிஎனத் தெரியாமல் 
இத்தனை நாள் போடி வாடி 
என்றெல்லாம் அழைத்துக் 
கொண்டிருந்தேனே !

#திருக்கோயில்_கவிதைகள் ..எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து
வெளியில் வந்து
என்னோடு உட்கார்ந்திருந்தாய் !
 கருவறையை விட்டு
எந்தச் சாமியாவது
எழுந்து வருமா ?
நீ மட்டும் ஏன்
இப்படிச் செய்கிறாய் ?

#திருக்கோயில்_கவிதைகள் ..
வைரப்புன்னகை மிளிரும் 
தெய்வப் பேரொளித் தோகை ! 
வந்து நின்றாளோ இல்லையோ 
கண்முன் .. 
வணங்கித் தொழத் 
தொடங்கிவிட்டன கைகள்... 
சட்டெனத் திரும்பிஎன் 
திசை பார்த்து ஒரு 
ஆசை சொல்கிறாள்.. 
"உன் கை பிடிச்சுக்கணும் போலருக்கு தருவியா ?" 
நெக்குருகிப் போய் 
நெஞ்சின் துடிப்பிழந்தொரு 
பார்வை பார்க்கிறேன் ! 
எந்தச் சாமி இப்படியெல்லாம் 
கேட்டுப் பார்த்திருக்கிறீர்கள் ? 
அவள் கேட்டாள் ! 
அவள் பிடித்துக்கொள்வதற்காக... 
அவளே விரும்பிப் 
படைத்த என் கைகளைக் கேட்டாள் !

#திருக்கோயில்_கவிதைகள் ..
சாமி வீதி உலா சென்றிருக்கிறதாம் .. 
வெளியில் வேட்டுச் சத்தம் 
கேட்கிறதென்கிறார்கள் சிலர்.. 
பைத்தியக்காரர்கள் ! 
உட்பிரகாரத்தில் 
நீ என்னோடு தானே 
நடந்து வந்துகொண்டிருக்கிறாய் ... 
நீ எப்படி வீதி..... உலா....? 

#பிரபாகரன்_சேரவஞ்சி


யார் கேட்டாலும் 
இரு உதட்டில் 
கொஞ்சமாய் சிரிப்பு.. 
எனக்கு மட்டும் 
நூறு நிலா ஆயிரம் சூரியன் 
லட்சம் கடவுள் கோடி மின்னல் 
கொஞ்சம் பட்டாம்பூச்சி 
கொஞ்சும் மழலை 
கொட்டும் மழையெல்லாம் 
கொட்டிச் செய்த சிரிப்பு ! 
என்ன மாதிரி பெண் நீ ! 
எந்தக் கடவுளின் கடவுள் நீ ? 

உண்மையைச் சொல் யார் நீ ?
நுனிவிரலின் 
துளி ஸ்பரிசத்தில் 
நூறாண்டுக்கான வரத்தையும் 
ஒரேடியாய் 

ஒளித்து வைத்திருக்கிறாள் !

Pics : Arun titan Studio, Shegy Photography and other pics Taken online ! 


Saturday, July 6, 2013

எது பூ எது நீ ? - 20 குறுங்கவிதைகள்


உன் எழில் இப்
பிரபஞ்சத்தின் அளவென்று 
சொல்லிக் கொண்டிருக்கையில் 
கேட்டுக் கொண்டிருந்த 
பிரபஞ்சம் 
சப்தமில்லாமல் 
தன் அழகைக் 
கள்ளத்தனமாய் 
கூட்டிக் கொண்டே போனது...
எல்லையில்லாப் பேரழகு 
என்று சொல்லிப் பார்த்தேன்.. 
பிரபஞ்சம் எல்லைகளைக் 
கடந்து விரிந்து கொண்டிருந்தது ! 
அடப் போ ! 
உன் அழகு பிரபஞ்சத்தின் அளவோ 
நிலவின் அளவோ 
பால்வெளியின் அளவோ இல்லை 
அது உன் அளவு ! 


••
துன்புறுத்தல் 
வெறுத்தல் 
பழித்தல் 
இம்சித்தல் 
எதிர்த்தல்
என எல்லா 
மண்ணையும் 
தள்ளிக் குழியில் 
போட்டொரு 
விதையை மறைத்தான்
மனிதன் !
இருப்பினும்
எட்டிப் பார்த்து
சிரித்தது ஒரு பூ
••
அன்பு !

            

••
எனக்குப்பிடித்த
எல்லா இசையையும்
வாசித்து வதைக்கிறது
உன் பொன்னுதட்டு
வீணைநரம்புகள்! 
••


••
இமைமூடாதொரு
புகைப்படமொன்று..
இமைக்க விடாமல்
என்னை இம்சிக்கிறது..
மூடாத உன்
கண்களுக்குள்..
ஒரு மூன்று லட்சம்
கவிதைகளுக்கு மேல்
பொதிந்து கிடக்கும் 
அமைதி
அழகு
எதார்த்தம் ..
மூன்றிலும்
மூழ்கிப்போனேன் !

••
இன்னொரு முறை
என் கைப்பிடித்துக்கொள் !
மீண்டுமொருமுறை
கடவுளின் கைகளுக்குள்
என்னை குடியமர்த்து !••
எனக்கான காதலையும் 
சிலநேரம்
உன் வசமாக்கிக் கொள்கிறாய் ...
அப்போது மட்டும் 
உன்மேல் தீராத கோபம் 
மற்ற நேரங்களில் 
எப்போதும் 
மாறாப்ரியம் தான் கண்ணா !
••
••
ஒன்று 
பேசிவிட்டுச் சிரி, 
இல்லை சிரித்துவிட்டுப் பேசு...
எதை முழுமையாய் ரசிப்பதென 
பூக்களும் நானும் 
திணறிப்போகிறோம்...
பார்த்து கொஞ்சம் 
கருணை செய் !
••
                  பிரபாகரன் சேரவஞ்சி


           என் எல்லா காதலையும் 
கொட்டித் தீர்த்திட 
உன்போல் 
வார்த்தைகள் 
கிடைப்பதில்லை 
என்கிறாய்...
ஹ்ம்ம் 
எனக்கும் நீ இல்லாமல் 
இருந்திருந்தால் 
ஒரு குட்டிக் கவிஞன் 
பிறக்காமலே இறந்திருப்பேன்!
••

••
பூக்களென்பது
வெறும் பூக்கள் 
மட்டும் தான்... 
அதன் வாசமெல்லாம் 
உன்னிலிருந்து 
திருடப்பட்டவை 
••
               பிரபாகரன் சேரவஞ்சிகொலை செய்வதற்கு ஒன்றும்                                                  
வாழவைப்பதற்கு ஒன்றும் என 
மொத்தம்
 இரண்டு வைத்திருக்கிறாள்,..
எது வாழவைக்கிறது 
எது சாகடிக்கிறது 
எனப் புரியாமல் 
செத்துக் கொண்டே 
பார்த்துக் கொண்டிருக்கிறேன் !
பார்த்துக் கொண்டே வாழ்ந்து 
கொண்டிருக்கிறேன் !
••
எல்லாம் சூழ்ந்திருக்கிறது.. 
என்னெனவோ என்னைக் 
கட்டியணைத்துக் கொஞ்சுகிறது ...
சிரிக்க வைக்க எத்தனிக்கிறது 
அது வரமென்று 
நொடிக்கொருமுறை சொல்லிக் 
கொண்டே இருக்கிறது... 
நான் போதுமென்கிறது..
நல்லது ! நிற்க.

ஏதுமில்லாத் தனிமையில் 
எங்கேனும் ஒரு மூலையில் 
சுருண்டு படுத்துக்கொண்டு 
உன்னை உயிருக்குள் 
கொஞ்சம் கொஞ்சமாய்ஊற்றி 
நிறைத்துக் கொண்டிருப்பேனே.. 
அந்நொடியைப் பற்றி 
யாருக்கும் தெரியாதா ?
எதற்கும் புரியாதா ?

ஏன் என்னை வஞ்சச் சிரிப்பில் 

மூழ்கடிக்கப் பார்க்கிறார்கள் ?

ஏன் என் வரமாய் 
எல்லா பொய்களையும் 
திணிக்கிறார்கள் ?

யாதொன்றும் சுகமெனப் 
படுவதில்லை..
ஏதொன்றும் சாஸ்வதமாய் 
தெரிவதுமில்லை...

என் தனிமைக்கோவிலில் 
என் தெய்வத்தின் 
நினைவுக் காலடியில் 
கொஞ்ச நேரம் அமர்ந்து 
இளைப்பாறுகிறேன்.. 
வாழ்க்கையின் பேரழகு 
கண்முன் விரிந்து கிளைபரப்பி 
விஸ்வரூபமெடுத்து நிற்கிறது !
அப்போது மட்டும் தான் 
வாழ்வொரு வரமெனப்படுகிறது !
போதும்.
அது போதும் !
••
               பிரபாகரன் சேரவஞ்சி

••
நெற்றியிலொரு
முத்தமிட்டெழுப்பு..
நீ கொடுக்கும்
வரத்திலிருந்துதான்
என் நாட்களின்
சந்தோஷங்கள்
நல்லபடி
துயிலெழுகின்றன !

••
            பிரபாகரன் சேரவஞ்சி


••
வாழ்க்கையின் பாதையில்
விதியடித்துத் துண்டானதோ.,
விடாமல் இன்றும் தொடர்கிறதோ
நம் இதயங்களின் தடங்கள்..
யார் எங்கிருப்பினும்  
நொடி நினைப்பில்
தூறல் விழும்..
மழை பெய்யும்..
கண்கள் குளமாகும் !
எத்தனை அழுதாலும்
அழுது முடித்ததும்
சிரிப்பு வரும்
..
..
அதுதான் காதல்!

••
கொஞ்சல்களுக்கு 
நீ செவிகொடுக்கும்போது
குழந்தையாகிக்
கசிந்துருகும்
தேவராகத்தை
எங்கிருந்து கற்றாய் நீ !
அப்பா !
அணைத்துக் கொ(ல்)ள்கிறது !
குரல்
••

                     
                      ••
    ஒரு கையில் 
        என் எல்லா அன்பையும் 
       அள்ளிக் கொண்டு
மறுகையில் 
  உலகனைத்தையும் 
கதவடைக்கிறாய்..
போதுமென்கிறாய் 
 நான் போதுமென்கிறாய் !
மூச்சுப் பேச்சற்று நிற்கிறேன்..
நான் போதுமென்கிறது
என் உலகம் !
நான் போதுமென்கிறது!
••
                பிரபாகரன் சேரவஞ்சி

    Pic : Aa Photography

             
   ••
    உயிரை விட்டு வெளியில் 
   பொங்கிப் பாய்கிறது அன்பு..
   கட்டி யணைபோட்டு 
செவ்வுதட்டில் தேக்கப் 
பார்க்கிறது முத்தம் !
இருந்தும் அணை உடைகிறது..
இன்பத்தில் ஈருயிர் கலக்கிறது ...
நிலவுகள் திரையிட்டு 
முயங்கிப் போகிறது !
அப்பப்பா...
பெருவாழ்வு வாழ்கிறது காதல் !
பெருவாழ்வு ! 
••


           
 ••
            எவ்வளவு பிடிக்குமென்றால்   
             என்ன பொய் சொல்லட்டும் ?

          கவிதையும் ஏதும் 
         தோன்றாத போது 
          எப்படிச் சொல்லட்டும் ?

          நினைத்துக் கொண்டே
                                          இருக்கும் அளவிற்கும் ..
    
          பார்த்துக் கொண்டே
          இருக்கும் அளவிற்கும் ..

       ரசித்துக் கொண்டே
       உருகும் அளவிற்கும் ..

  சுவாசித்து கொண்டே 
  ஜீவிக்கும் அளவிற்கும் 
 பிடிக்கும் !

          இப்போதைக்கு இவ்வளவுதான் !

     ••

         
                          

                ••
          காலையில் எழுந்து 
          கண்ணாடி பார்த்துச் 
          சிரிக்கையில் 
         பூக்களின்
             புதுமின்னலொன்று 
          உதட்டைப் பிளந்து
           சிரிப்பைத் தெறித்து
          உயிருக்குள் 
           இறங்கிக்கொண்டிருந்தது...
          இது யாரின் வேலை என்று
          காற்றிடம் கேட்டேன் ...
           உதடுகளில் சின்னதாய்
          உன் முகம் வரைந்து காட்டி
          மறைந்து போனது ...
   
          அழகான காலைக்கும்
          ஆஸ்வாசமான காற்றுக்கும்
        அத்தனை சாமிக்கும்
         மேலான என்அழகிக்கும்
         நன்றி! 
        ••
                  பிரபாகரன் சேரவஞ்சி

        
   ••
           கண்ணெதிரில் 
        புன்னகை யாழ் 
       மீட்டுகிறாள்..
           பொன்னிதழ் நரம்பில் 
              பூகம்பமாய்க் கிளம்பிய
         பட்டாம்பூச்சிகள் 
    கொஞ்சம் 
             வேகமெடுத்து வந்தென் 
    வயிற்றுக்குள்  
            நுழைந்துகொண்டு
                 என்னமோ செய்கிறது !
            என்னென்னமோ ..
              என்னென்னென்னென்னமோ
••

             
••
பூக்கள் அழகா 
        இல்லை நானா என்றாய்.. 
  எது பூ 
    எது நீயெனப் 
   புரியாமல் 
  வெகுநேரமாய் 
  யோசித்துக் கொண்டே 
     இருக்கிறேன்... 
••