Showing posts with label அழகிய முற்றுப்புள்ளி. Show all posts
Showing posts with label அழகிய முற்றுப்புள்ளி. Show all posts

Friday, July 2, 2010

அழகிய முற்றுப்புள்ளி


பிறையிடை சுமந்துநீ 
தரணிக்குத் தவறிவிழுந்த 
நிலவென்றேன்!

போய் வேற வேலையிருந்தா 
பார் ரா என்றாய் !

பார்த்த நொடியிலேயே 
பற்றித்தான் கொண்டது 
காதல் என்றேன் !

கவிதையில் பொய் எழுதிய 
காலம் போய் இன்று
பொய்யையே கவிதையாய் 
எழுத ஆரம்பித்து விட்டாயோ என்றாய் !

நாணத்தில்நீ 
நான்கு விரல்களையும் 
பிசையும் அசைவினில்
நான் பார்த்த அழகினை 
யார் பார்த்திருக்கக் கூடுமென்றேன்!


போதும் நிறுத்து உன் 
பொல்லாத பெண் பெருமையை என்றாய் !


கருப்புவானக் கூந்தலில் 
நூலில் கட்டிய கால்முழ நிலவாய் 
இடம்பிடித்திருந்த மல்லிகையைக் கேட்டேன் !


மாற்றான் தோட்டத்தில் இந்த
ம(மா)துவுடன் சேர்வதற்குத் 
தவமிருந்த கதை சொன்னது !

பூக்களின் இளவரசியின் கிரீடத்தில் 
இடம்பிடிக்க எந்த மலருக்குத்தான் 
ஆசை வராது என்று சொன்னேன் !


தாங்க முடியவில்லை!
தயவுசெய்து கவிதையை முடி என்றாய்!


கார்மேக வெள்ளைநிலா 
பார்த்திருக்கிறோம் 
வெண்மேக கருப்புநிலா 
யார் பார்த்திருக்கக் கூடும்?
நான் பார்த்திருக்கிறேன் உன் 
கண்களுக்குள் என்றேன் !


முடியலடா ! போதும் என்றாய் !
இரண்டே வார்த்தையில்!


சரி போதும் பிழைத்துப்போ !
முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன் !
உன் அழகிற்காய் கன்னத்திலும் 
அதை சொன்ன என் கவிதைக்கும்!