Saturday, July 31, 2010

அழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட!

உன்னை என்றுமே
மறக்கப் போவதில்லை !!
 
என்று நான் எத்தனை
பொய்க்கவிதை எழுதினாலும்
நீ படித்துவிட்டு பிடித்திருக்கிறது
என்று தான் சொல்லப்போகிறாய்!
 
இப்போதாவது நிசம்
என்னவென்று கேள்! !
 
உன்கூடவே இருக்கவேண்டும்
என்ற என் ஆசை ஒன்றும்
கடைசி வரைக்கும் இல்லை அழகி ! !
 
நாளை, நிலவும் சூரியனும் வானிற்கு
அழகு சேர்க்கப் போவதில்லை
என்று சேதி வரும் நாள் வரைக்கும் மட்டுமே!!
 

Wednesday, July 28, 2010

ஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..

ஆறு பில்லியன் உயிரினங்களில் இல்லாத 
எந்த அம்சத்தை நீ சொந்தமாக்கிக் கொண்டாயோ...?
என் அத்தனை துடிப்புகளும் உனக்காக மட்டுமே 
தொடங்கி முடிகிறதே அழகி...!!

Friday, July 23, 2010

ஒரு ஊஞ்சலின் புலம்பல்!

உயிருக்குள் உணர்வாகவும் 
உணர்வுகளுக்குள் உயிராகவும்
என் விதிக் கவிதையில் 
கடைசி வரை நிலைக்கப் போகும் 
முற்றுப்புள்ளியே ! 
என் முழுநிலவு அழகியே! கேள்..!!

நீயும் நானும் ஊருக்கு தெரியாமல்
ஓடிபிடித்து விளையாடிய இடத்திற்கு 
நெடுநாட்களுக்கு பின் 
நேற்றுதான் சென்றிருந்தேன்!

ஆலமர விழுதில் 
அன்று யார் முடிச்சோ?
அந்த ஒற்றை ஊஞ்சல்
வாழ்வதற்கு பயந்து 
தொங்கிவிட்டது கயிற்றில்!

உயிரில்லாத ஊஞ்சல்களின் 
அருகில் நின்று பார்த்தேன்!
லேசாக அசைந்த ஊஞ்சல்., 
தான் உயிரோடிருக்கும் சேதியை
என் செவிகளுக்குள் 
காற்றாகிச் சொன்னது..!

காற்றில் அசைந்த கட்டை ஊஞ்சல் 
என் நினைவுகளை இடித்து 
சட்டைக் காலரை பிடித்துக் கேட்டது..!

என்மடியில் அவளும் 
அவள் மடியில் நீயும் அமர்ந்து 
அழகு சேர்த்த நாட்களை 
எங்கே தொலைத்துவிட்டாய்?
"எங்கடா உன் அழகி..??" என்றது ..!

ஊஞ்சலின் கால்களில் வீழ்ந்து 
அவள் பாதச் சுவடுகள் அன்று 
உதைத்த மணல்களின் மடியில் 
இருவரி எழுதிவிட்டு எழுந்தேன் ....!

மன்னித்து விடு ஊஞ்சலே..! 
உன் கேள்விகளுக்கு!
என்னிடம் மௌனத்தில் கூட பதில் இல்லை..!    


Sunday, July 18, 2010

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம் !
சாத்தியம் தான் 
என்று என்னோடு 
சண்டை போடுகிறது  மனம் ! 

நம்மை சுற்றி இருக்கும்
உலகம் இன்னும் அழியத்
தொடங்கவில்லை!

நம் இதயம் ஓய்ந்து 
நிற்கப்போகும் நொடியும் 
ஒன்றும் அருகிலில்லை!

இப்பவும் உன் கண்களைப் 
பார்த்த நொடியில் 
அழுகை வரும்!

அடுத்த நொடியிலேயே 
என்னை சிரிக்க வைக்க 
உனக்கும் தெரியும் ! 

ஒருகையில் என் கண்களைத் 
துடைத்துக்கொண்டு 
மறுகையால் உன் 
கைகளைப் பிடித்துக் கொண்டு,

உன்னைக் காதலிக்கிறேன் என்று
சொல்வதற்கு நேரமிருக்கிறது!

"நீதான் இல்லை"

"எல்லாம் இருந்தும் எதுவுமில்லை " 
என்ற பழமொழிக்கு .,
அர்த்தம் தெரிய வைத்தமைக்கு
 நன்றி! அழகி ! Saturday, July 17, 2010

அழகி - நினைவுகள் நடத்தும் டூரிங் டாக்கீஸ்

என் நினைவுகள் கட்டிய  டூரிங் டாக்கீஸில் தினமும்  இரவு நேரக் காட்சி நீ ! மூன்று மணிநேரக் காதல் முடிந்ததும் சுவர்க்கடிகார முள் காட்டும் நேரம் " ஒன்று "!  நம் பிரிவை தாமதமாய் அறிந்த விதியும் இப்போது நம் அன்பைப் பார்த்தால் அழுதுவிட்டுப் போகும்! அப்படிப்பட்ட உன் பிரிவிற்குப் பின் என் இரவெனும் பகலை எப்படிக் கடக்கிறேனென்று நீயே பார் அழகி!


மணி 1 : 20  :  நான் இன்னும் தூங்கவில்லை

மணி 1 : 21 :  அனுமதி இல்லாமல் என் நினைவுகளை திரும்ப வந்து ஆக்கிரமிக்கிறாய்

மணி  1 : 22 :  நீ முதன் முதலில் என் விரல்களை பிடித்த நினைவுகளை அசைபோட நினைவு படுத்துகிறாய்! 

மணி  1 : 23 :  என் கறுப்புக் கைகளை உன் வெண்ணிறக் கரங்கள் பிடிக்கையில் நம் கண்கள் பேசிக்  கொண்ட மொழி எனக்கு ஞாபகம் வருகிறது!

மணி  1 : 24 :  நான் சிரிக்கிறேன்!  


மணி  2 : 00 : நான் உன்னோடு இருக்கையில் உனக்கு ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு! என் தொடைகளை  கிள்ளி வைப்பாய்!உனக்குப் பிடிக்கும் என்று வலியை மறைக்க நினைத்தாலும் வழி தாங்க முடியாமல் கத்தியிருக்கிறேன்! உன்விரல்கள் என்மேல்பட நான் எவ்வளவு வரம் வாங்கியிருக்க வேண்டும்!

மணி  2 : 25 :  மறுபடியும் உன் நினைவுகள்

மணி  2 : 45 :  உன் தோள்களில் சாய்ந்துகொண்டு உன் உதடுகளை வருடிக்கொண்டிருந்தேன்! என் விரல்களால்!

மணி  3 : 00 :  விழிப்பதற்கு சத்தியமாய் எந்தத் தெம்பும் இல்லை! தூங்கச் சொல்லும் அப்பாவின் அதட்டல்களை மீறி இன்னமும் நான் விழித்து தான்  இருக்கிறேன்!

மணி  3 : 45 :  சாமி சத்தியமாய் இன்னும் தூங்கவில்லை!


மணி  4 : 00 :  நீ !  நீ !  நீ மட்டுமே!
 
மணி  5 : 00 : என்னோடு நீயில்லை என்று இப்போது தான் நினைவிற்கு வருகிறது! கூடவே அழுகையும்!

மணி  6 : 05 :  எப்படியோ என் நினைவுகளை விட்டு வெளியேறி விட்டாய்! ஆனால் கொஞ்ச நேரத்தில் இதயக்கொட்டகையில் வந்தமர்ந்து கொள்கிறாய்!

மணி  7 : 00 :  அப்பாடா ! எப்படியோ தூங்கிவிட்டேன்!
 
 மணி  8 : 20 :  கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கிறேன் !


Friday, July 16, 2010

உன்னை விட மற்றவரிடம்!

சிலநேரங்களில் உன்னைவிட
இன்னொரு பெண்ணிடம் 
அதிகம் பேசவேண்டும் 
போலத்தான் இருக்கிறது..!!
ஆம்..!
பேசுவது உன்னைப்பற்றி 
மட்டுமாய் இருந்தால்!Wednesday, July 14, 2010

கணக்கு நோட்டுக் காதலி !

எத்தனையோ திமிங்கலங்கள் 
உலகினில் இருந்த போதும்
ஏனோ இந்தச் சின்ன மீனைநீ 
இரசிப்பதாய்ச் சொன்னாய்!!
சாதிமதம் காசுபணம் ,
செகப்பு வெள்ளை கறுப்பென்று,
கணக்குப் போட்டுக் காதலிக்கும் 
இந்தக் காலத்துக் காதல்-உனக்கு 
சுட்டுப்போட்டாலும் வராது போல 
அழகி!


         Thanks for filling me in every single pages of your life !! Love you azhagi. . .!!


Tuesday, July 13, 2010

காலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்

உன் நினைவுகளைக் 
கண்ணாடியில் காட்டிப்பார் !

என் கைகளைக் 
கட்டியணைத்துக் கொண்டு ,
'விடமாட்டேன்' என்பது போல்,

உன் வீட்டு கதவுகளை நீ  
அடைத்த நேரங்களின் பிம்பங்களை ,
நீஎனை  விட்டுப் போனபின்பும் 
இன்றும்கூட பிரதிபலித்துக்கொண்டு 
தான் இருக்கிறது ..!!

இது, 
கடந்துபோன காலக் கண்ணாடியில் 
முடிந்து போன காதல் பிம்பங்கள் !

ரசித்த கனவு !

நான் கண்ட கனவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த கனவு
"நீ " மட்டும்தான் ! ஆம்! நினைவை விட்டு மறக்காத  கனவு
     நீ மட்டும் தான் அழகி!

உன்னைப் பிடிக்கும் நொடிகள்

இரண்டு தருணங்களில் ஏனோ
உன்னை ரொம்பவும் பிடித்துப் போகிறது
ஆம் .,
1 . கனவுகளிலும் ! 2 . நிஜங்களிலும் ! 

  

Monday, July 12, 2010

Possessiveness எனும் காதல்!

விதி எழுதிய பிரிவுக்கவிதையில் ,
சோகம் சுமந்த சுகங்கள்
நீயும் நானும் தான் அழகி !

சிரித்துக்கொண்டே
பிரிவை ஏற்றோம் !
பிரிவிற்கு முன் ஒரு நாள் ...

எனக்குத் திருமணமான பின்பு
கண்டிப்பாய்  பெண் குழந்தை
தான் பிறக்க வேண்டும் !

அதற்கு "அழகி" என்று
உன் பெயரையே
வைத்து விடுகிறேன் அழகி
என்றேன்!

ஏதும் பேசாமல் வாயடைத்தவள்
போல் நீயோ சொன்னாய் ...

" நான் மட்டும் தான பிரபா
உன் அழகி ...!???? "
என்று...!!


சரிதான் மன்னித்து விடு!
உன்னை ஒருநிமிடம்
பிரியப் பார்த்தேன் !

பெண்களின் உறவிற்கு
எத்தனை பெயர் இருக்கிறதோ
அத்தனை பெயரும் எனக்கு  
நீமட்டும்தான் அழகி..!!

Sunday, July 11, 2010

காதல் - கொஞ்சம் உண்மைகள்

உணர்ச்சிகளிலிருந்து உயிரைத்
தட்டிஎழுப்பும்து இந்தக் காதலில் தான்
எத்தனை உண்மை இருக்கிறது !

ஆசையில் வழி மாறியவனுக்கு
அன்பினால் வழி காட்டுகிறது! -அது !

நம் எதிர்பார்ப்புகளின் முகவரிக்கு
எத்தனை இடர்வரினும்
கொண்டுசேர்த்து விடுகிறது!
 கொஞ்சம் கொஞ்சமாய் நம்
அன்பு காட்டும் பாதையில்!

இதயத்தில் சிலநேரம்
தீவிதைத்துப் போகிறது!
இருந்தும் நேரமுள் அது நகர நகரl
நெருங்கி வந்து நீரூற்றியும்
அணைக்கிறது அன்பு!

பிரிவின் தொடக்கத்தில்
அழ வைக்கிற காதல் தான்! பின்
பழைய நினைவுகளாய் மாறி
சிலிர்க்கவும் வைக்கிறது!

நீ கொடுத்த காதலும்
இப்படித்தான்! அழகி!
நான் உனக்குக் கொடுக்க நினைப்பதும்
இதே காதலைத்தான்!

Tuesday, July 6, 2010

செல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்


ஊருக்கே விடிந்தாலும்
உனக்கு மட்டும்
விடிந்தே தொலையாதே!?"

என்ற என் அன்னையின்
இருவரி சுப்ரபாதத்துடன்
இனிதே தொடங்கியது
நேற்றைய நாள் ! 

எல்லா பாடல்களையும் கேட்டு
மனதிற்குள்ளேயே சிரித்துவிட்டு
போர்வை விளக்கினேன் !

அங்குமிங்கும் நட்டுவைத்த
நாற்றைப்போல நிமிர்ந்து
நின்றுகொண்டிருந்த தலைமுடியை
அரைநிமிடம் சரி செய்தும்
அடங்கவில்லை அது !

போராடியது   போதும்
பொங்கி எழு என்று
எப்படியோ எழுந்துவிட்டுத்
திரும்பினேன்!

அடக்கொடுமையே!
 யாரோ ஒருத்தி
என் பின் அமர்ந்துகொண்டு என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாள்!

சிரிப்பை மறைக்க அவளுக்கு
ஒரு கைக்குட்டை போதவில்லை
போலத்தான் தெரிந்தது!

தூங்கிக்கொண்டிருக்கும் என்
அத்தனை அசைவுகளையும்
அசராமல் பார்த்து சிரிப்பதற்கே
வந்திருப்பாள் போல!

சும்மா சொல்லகூடாது !
செம அழகி தான் அவ !

அப்பா..! சாமி!
எப்படியோ அவளை கடந்து சென்று
குளியலறைக்குள் நுழைந்து
தாளிட்டுக்கொண்டேன்.!

குளியலறைக் கண்ணாடி
காட்டிய என் முகம்
என்னைக் கண்டபடி கிச்சு கிச்சு
மூட்டி சிரிக்க வைத்தது!

என்னை மறந்து நானே
என்னை சிரிக்கவைத்து விட்டேன்!

பின் ரொம்பநேரம் 
வழக்கம் போலவே
வெட்டியாய் என் கணினியின் முன்
தீர்ந்து கொண்டிருந்தது !

சோறு , காப்பி , டீ, ஏதும்
கிடைக்காது போலத்தான்
தெரிகிறது இன்று!

சமையற்கட்டில் ,
என் சுப்ரபாதத் தாயும் .,
என் திருப்பள்ளி எழுச்சியை
ரசித்த ஆண்டாளும்
அரங்கேற்றிய அரட்டையில்
என் பசி ஒரு பத்துப் பதினைந்து
மயில்களுக்கு அப்பால் போயிருக்கும் !

ஆனால் ஏனோ அந்த
முகம் தெரியாத
அழகிக்கு மட்டும்
அத்தனை உபசரிப்புகள் !

எல்லாம் முடிந்து
அவள் கிளம்பிய பின் கேட்டேன் !

"யாரும்மா அந்த புள்ள ?" என்று !
"தூரத்து சொந்தம் டா" என்று சொன்னார்!

சரிதான் !
"நிலவு" ஒரு வகையில்
தூரத்து சொந்தம் தானே!

Friday, July 2, 2010

அழகிய முற்றுப்புள்ளி


பிறையிடை சுமந்துநீ 
தரணிக்குத் தவறிவிழுந்த 
நிலவென்றேன்!

போய் வேற வேலையிருந்தா 
பார் ரா என்றாய் !

பார்த்த நொடியிலேயே 
பற்றித்தான் கொண்டது 
காதல் என்றேன் !

கவிதையில் பொய் எழுதிய 
காலம் போய் இன்று
பொய்யையே கவிதையாய் 
எழுத ஆரம்பித்து விட்டாயோ என்றாய் !

நாணத்தில்நீ 
நான்கு விரல்களையும் 
பிசையும் அசைவினில்
நான் பார்த்த அழகினை 
யார் பார்த்திருக்கக் கூடுமென்றேன்!


போதும் நிறுத்து உன் 
பொல்லாத பெண் பெருமையை என்றாய் !


கருப்புவானக் கூந்தலில் 
நூலில் கட்டிய கால்முழ நிலவாய் 
இடம்பிடித்திருந்த மல்லிகையைக் கேட்டேன் !


மாற்றான் தோட்டத்தில் இந்த
ம(மா)துவுடன் சேர்வதற்குத் 
தவமிருந்த கதை சொன்னது !

பூக்களின் இளவரசியின் கிரீடத்தில் 
இடம்பிடிக்க எந்த மலருக்குத்தான் 
ஆசை வராது என்று சொன்னேன் !


தாங்க முடியவில்லை!
தயவுசெய்து கவிதையை முடி என்றாய்!


கார்மேக வெள்ளைநிலா 
பார்த்திருக்கிறோம் 
வெண்மேக கருப்புநிலா 
யார் பார்த்திருக்கக் கூடும்?
நான் பார்த்திருக்கிறேன் உன் 
கண்களுக்குள் என்றேன் !


முடியலடா ! போதும் என்றாய் !
இரண்டே வார்த்தையில்!


சரி போதும் பிழைத்துப்போ !
முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன் !
உன் அழகிற்காய் கன்னத்திலும் 
அதை சொன்ன என் கவிதைக்கும்!