என் நினைவுகள் கட்டிய டூரிங் டாக்கீஸில் தினமும் இரவு நேரக் காட்சி நீ ! மூன்று மணிநேரக் காதல் முடிந்ததும் சுவர்க்கடிகார முள் காட்டும் நேரம் " ஒன்று "! நம் பிரிவை தாமதமாய் அறிந்த விதியும் இப்போது நம் அன்பைப் பார்த்தால் அழுதுவிட்டுப் போகும்! அப்படிப்பட்ட உன் பிரிவிற்குப் பின் என் இரவெனும் பகலை எப்படிக் கடக்கிறேனென்று நீயே பார் அழகி!
மணி 1 : 20 : நான் இன்னும் தூங்கவில்லை
மணி 1 : 21 : அனுமதி இல்லாமல் என் நினைவுகளை திரும்ப வந்து ஆக்கிரமிக்கிறாய்
மணி 1 : 22 : நீ முதன் முதலில் என் விரல்களை பிடித்த நினைவுகளை அசைபோட நினைவு படுத்துகிறாய்!
மணி 1 : 23 : என் கறுப்புக் கைகளை உன் வெண்ணிறக் கரங்கள் பிடிக்கையில் நம் கண்கள் பேசிக் கொண்ட மொழி எனக்கு ஞாபகம் வருகிறது!
மணி 1 : 24 : நான் சிரிக்கிறேன்!
மணி 2 : 00 : நான் உன்னோடு இருக்கையில் உனக்கு ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு! என் தொடைகளை கிள்ளி வைப்பாய்!உனக்குப் பிடிக்கும் என்று வலியை மறைக்க நினைத்தாலும் வழி தாங்க முடியாமல் கத்தியிருக்கிறேன்! உன்விரல்கள் என்மேல்பட நான் எவ்வளவு வரம் வாங்கியிருக்க வேண்டும்!
மணி 2 : 25 : மறுபடியும் உன் நினைவுகள்
மணி 2 : 45 : உன் தோள்களில் சாய்ந்துகொண்டு உன் உதடுகளை வருடிக்கொண்டிருந்தேன்! என் விரல்களால்!
மணி 3 : 00 : விழிப்பதற்கு சத்தியமாய் எந்தத் தெம்பும் இல்லை! தூங்கச் சொல்லும் அப்பாவின் அதட்டல்களை மீறி இன்னமும் நான் விழித்து தான் இருக்கிறேன்!
மணி 3 : 45 : சாமி சத்தியமாய் இன்னும் தூங்கவில்லை!
மணி 4 : 00 : நீ ! நீ ! நீ மட்டுமே!
மணி 5 : 00 : என்னோடு நீயில்லை என்று இப்போது தான் நினைவிற்கு வருகிறது! கூடவே அழுகையும்!
மணி 6 : 05 : எப்படியோ என் நினைவுகளை விட்டு வெளியேறி விட்டாய்! ஆனால் கொஞ்ச நேரத்தில் இதயக்கொட்டகையில் வந்தமர்ந்து கொள்கிறாய்!
மணி 7 : 00 : அப்பாடா ! எப்படியோ தூங்கிவிட்டேன்!
மணி 8 : 20 : கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கிறேன் !