Wednesday, May 30, 2012

ஒரு பூ பிறக்கிறது - என் முதல் சிறுகதை

அது ஒரு சித்திரைத் திங்கள் கடைசி வாரம் .அக்னி நட்சத்திர வெய்யில் அழகாய் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது.வழக்கம் போலவே மூன்று மணி முப்பது நிமிடங்களுக்கெல்லாம் எழுந்த நீ , நான்கு மணிக்கெல்லாம் சென்றுவிட்டாய் .உன் கணவனையும் கூட்டிக்கொண்டு.நீங்கள் உங்களுக்காய் வாடகைக்கு வாங்கி வைத்திருக்கும் சொத்து , அந்தப் பத்தடி நீலமோ ஐந்தடி அகலமோ  கூட இல்லாத தேநீர்க்கடையைத் திறக்க.ஆம் நீங்கள் இருவரும் நிற்குமிடம் அளவிற்கு அவ்வளவு பெரிய தேநீர்க்கடையை சேரவஞ்சியின் வரலாறு பார்த்திருக்குமோ என்னவோ சந்தேகம் தான் .

நிற்குமிடத்தை மட்டும் சொந்தமாகக் கொடுத்தால் திண்மை நிறை நல்லோர் என்ன செய்தேனும் உயரத்தை தொட்டுவிடுவார்கள் . அந்த ஆயிரத்தில் இருவராக நீங்கள் இருவரும் இன்று இடம் பிடிப்பீர்கள் என்று உலகம் கண்டிப்பாக நினைத்துப் பார்த்திருக்காது . அன்றைய உங்கள் சுற்றம்  உங்களைப் பழித்திருக்கும் , சிரித்திருக்கும் , ஏளனம் செய்திருக்கும். நீங்களாவது பிழைப்பதாவது என்று ஒரு கூட்டம் உங்களை கண்டிப்பாய் கேலி செய்திருக்கும். இருப்பினும் நீங்கள் யார் ? குணக்குன்றுகளும், 'உழைத்து ஓடாய்த் தெய்வதெ'ன்ற சொல்வழக்கின் மொத்த அர்த்தமும் அல்லவா ! கடை திறந்து  நிமிடங்கள் பத்து இருபதென்று பறக்கிறது  . முதல் நாள் களைப்பே நீங்கியிருக்காத உனக்கோ மறுநாள் பொழுது ஏன்தான் சீக்கிரமாய் விடிந்ததோ . உனக்கு ஓய்வு வேண்டும் என்று இரவின் மீது என் கோபமும் , நீ உழைத்து முன்னேற வேண்டுமென்று சீக்கிரமே விடிந்த காலையும்,  இரண்டுமே என் மனதில் சண்டையிட்டு சமாதானமாகிறது.

பாத்துக்கப்பா... என்று கணவரிடம் சொல்லிவிட்டு அரை மைல் தொலைவிலிருக்கும்  குழாயடிக்குச் சென்று தண்ணீர் சுமந்து வருகிறாய். நீ சுமந்து வருவது தண்ணீர் குடத்தை மட்டுமல்ல தளிர் விடும் பிஞ்சு உயிர் என்னையும் தான் . ஆம் உறக்கமின்றிக் கண்விழித்து ஒருபக்கமாய்ப் படுத்திருந்து , நான் ஆசுவாசமாய் மூச்சுவிட நீ அழுங்காமல் மூச்சுவிட்டு, என் பொருட்டு நீ எத்தனையோ உண்ண மறுத்து , காற்றும் மழையும் வெயிலும் கடந்த காலமெல்லாம், நான் நனையவோ , துடிக்கவோ , வெம்மையில் சுருங்கவோ கூடாதென்று வயிற்றில் குடைபிடித்து,  நான் அழாமலிருக்க நீ சிரித்து , உன் சிரிப்பின் சங்கீதங்களை மட்டும் எனக்கென உள்ளே அனுப்பி வைத்தாய்.. நான் யார் ? உன் மகனல்லவா ? உன் சோகம் புரியாதா ? உன் அன்பு தெரியாதா ? உன் அணைப்பும் ஆர்ப்பரிப்பும் எதுவென்று தெரியாதா எனக்கு  ?

அழுதேன்! ஒருதுளி உயிர்த்துளி, அந்த ஒப்பற்ற அன்பாலான வெண்ணிற மழைத்துளியாய் உன் கர்ப்பப்பைக்குள் விழுந்த போதே அழுதேன். . எவ்வளவோ லட்சியங்களை கனவுகளை சுமந்துகொண்டும் ஒரு காலத்தில் எட்டு பைசா பத்து பைசா சம்பளம் வாங்கின அப்பனும் ஆத்தாளும் டவுனுக்குப் பிழைக்க வந்து அக்கம் பக்கம் இருப்போரின் அன்பைப் பெற்றீர்கள் . நீங்களும் அன்பு வளர்த்து என்னையும் பிரசவித்து வளர்த்து வாலிபம் செய்ய எத்தனை சிரமப் படப் போகிறீர்களோ என்று அழுதேன்.

சிரித்தேன், மகிழ்ந்தேன், மறுநொடி நினைத்தேன் இப்படி, ஐம்பது ரூபாய் சம்பாத்தியத்திற்கு வழியில்லாத நேரத்திலும் , வயிற்றில் நான் முண்டியடித்துக் கத்திய போதும் வெளியில் விடச் சொல்லி உன் வயிற்றை நான் எட்டி உதைத்தபோதும் , எவ்வளவு அழகாய் பார்த்தது சிரித்துக் கொண்டும் , தாங்கிக் கொண்டும் , தடவிக் கொடுத்தும் இருந்தாய். அதை பார்த்து சிரித்தேன். "அம்மா" என கத்தி அழவேண்டும் போல இருந்தது ,இன்னும் எத்தனை நாட்கள் நான் உள்ளேயே இருக்கட்டும் ? என்னை நீ ஒரு ஜென்மம் முழுதும் கூட வயிற்றிலேயே சுமந்து கொண்டிருப்பாய் , ஆனால் எனக்கோ பத்து மாதத்திற்கு மேல் உன்னை சிரமப்படுத்த எண்ணம் ஏதும் இல்லை.உயிர்க்கதவுகளில் உதைத்தேன்.எட்டி என் அன்பையெல்லாம் சேர்த்திக் கொண்டு பிஞ்சுக் கால்களால் அப்படி உதைத்தேன்.வெளியில் விட்டுவிடு . என்னைச் சுமந்த வயிற்றில் நடத்திய சுற்றுப்பயணம் போதும் . என்னைத் தாங்கப் போகும் கைகள் எவை ? என்னை முத்தமிடப் போகும் கைகள் எவை ? என்னைப் பார்த்து ரசிக்கப் போகிற கண்கள் எவை ? என்னைத் தடவிப் பார்க்கும் கைகள் எவை என்று பார்க்க ஆசை. அதுதான் வெள்ளிக்கிழமை என்று கூட பார்க்காமல் என் உயிரின் பிறப்பிடத்தை எட்டி உதைத்தேன்.

நீ தண்ணீர் சுமந்து வந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது எனக்கு .நீ தூங்கிக் கொண்டிருப்பாய் என்றல்லவா நினைத்து உதைத்தேன். என்னவோ... நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத வலியை கொடுத்துவிட்ட சோகத்தில் எப்படியேனும் உன் உயிர்க்கதவுகளுக்குள் புகுந்து வெளியில் வந்து விட நினைத்தேன்.அத்தனை வலியிலும் இடுப்பில் சுமந்து வந்த தண்ணீர் கொஞ்சமும் சிந்தவில்லை. அன்பு சுமந்த மனிதர்களையும் , அன்பு கலந்து நீ செய்கிற எந்த வேலையையும், சிதறாமல் தாங்கிப் பிடிப்பதில் உனக்கு நிகர் நீயே . 

"வலி உயிர்போகிறது " என்று உன் கணவரைக் கூட்டிக் கொண்டு விரைந்து நடந்தாய்.அப்போதெல்லாம் ஆட்டோவா , பஸ்ஸா , காரா ? சைக்கிள் கூட இல்லாமல் அருகிலிருக்கும் நிர்மலா மகப்பேறு மருத்துவமனைக்கு நடந்தே சென்றிருக்கிறீர்கள் இருவரும்  . மருத்துவமனை கடிகாரம்  மணி 5 .30 :  என்று அறைகூவல் விடுக்கிற நேரம் . அன்று தான் ஊரின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் பூச்சொரிதல் விழாவும் கூட . சித்திரை மாதம் கடைசி வெள்ளி . அப்பாடா., என் காத்திருப்புகள் முடிந்துவிட்டது .

எங்கே உன் உயிரைத் தொலைத்துவிடப் போகிறேனோ என்கிற வலி எனக்கு. எங்கே உள்ளிருக்கும் என்னைத் தொலைத்து விடப் போகிறேனோ என்கிற வலி உனக்கு . இருவருமே துடித்தோம்.என் உயிரே.என் உயிரின் உயிரே.நீ யாரென்று பார்த்து மகிழ , அழுது மகிழ , சிரித்து மகிழ வேறு வழியும் தெரியவில்லை எனக்கு.வந்துவிட்டேன்.வந்தேவிட்டேன்.,பேரிடியாய் வானக் கதவுகளை திறந்துகொண்டு குருதி மழைபொழிய உலகத்தின் வெளிச்சத்தில் வந்து விழுந்தேன்.சந்தோஷப் பெருமூச்சு,உனக்கும் சரி எனக்கும் சரி .ஒப்பில்லா உயிர்மூச்சு .எனைப் பார்க்க ஏங்கிக் கிடந்தவள் கிறங்கிக் கிடந்தாலும் கொஞ்சமாய் விழித்துப் பார்க்கிறாய் .உன்னைப் பார்க்க ஓடோடி வந்தவன் உன்னை இவ்வளவு பாடு படுத்தி இருக்கிறேனே என்று நினைத்தால் மேலும் அழத் தோன்றியது .அழுதேன்.அன்றிலிருந்து இன்றுவரை உனக்குக் கொடுத்த மரணவலி என்று என் நினைவை முட்டினாலும் அழுவேன். 

நீயும் உன் கணவனும் ஏன் இத்தனை வைராக்கியத்தை சுமந்தவர்களாக இருந்தீர்கள்?  உன் பெயரை எழுதக் கூடத் தெரியாத நீயும், தன் பெயரை எழுதவும் படிக்கவும் தெரிந்துகொண்ட அப்பாவும் அண்ணனைப் போலவே என்னையும் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்தீர்கள் .இன்று நானும் சரி, அண்ணனும் சரி பொறியாளர்கள்.பத்து பைசா சம்பளம் வாங்கியவர் நீங்கள்.உங்களால் எங்களைப் பத்து பட்டப் படிப்புக் கூட படிக்க வைக்க முடியுமென்று நம்பினீர்கள். நடந்தது. இன்று அதே நம்பிக்கையும் , சகமக்களிடம் பேரன்பும் , பசித்த மானுடத்திற்கு அன்பால் அன்னமிட்டு பசியாற்றும் பண்பும் .இல்லாத ஏழைகளுக்கு என்னால் ஆன  உதவி  எதுவாயினும் செய்யவும் எத்தனையோ பண்புகளைக் கற்றுக் கொண்டேன்.

அன்று பார்த்த அதே அம்மா, இன்றும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மோர் கடைந்துகொண்டு . ஐந்து மணிக்கெல்லாம் கடைக்குப் போகிறாய். அப்பாவும் நீயும் தேநீர்க்கடையே உங்கள் திருப்பதியாகத் தினமும் அங்கேயே உழைத்துக் கிடக்கிறீர்கள். இடத்தையும்,அதன் அளவையும் , மாற்றிக் கொண்டீர்கள் .உங்கள் தொழிலையோ குணத்தையோ அன்பையோ எதையுமே நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை .நான் இன்றும் என்னால் இயன்ற அளவிற்கு மேல் உங்களை ஏதாவது ஒரு வழியில் இம்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன் , குணமும் கோபமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற எல்லா குறும்புக் குழந்தைகளையும் போல. ஆனாலும் அதற்குமேல் அளவற்ற அன்பையும் நேசத்தையும் உங்கள் மீது சுமந்துகொண்டுதான் இருக்கிறேன்.

உங்கள் இருவர் மீதும் என் பெருமை இதுதான். உலகத்தில் வேறு எந்தத் தாய்க்குப் மகனாகப் பிறந்திருந்தாலும் இத்தனை அன்புடன் நான் இருந்திருக்க மாட்டேன்.இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டேன்.உலகத்தில் வேறு எந்தத் தந்தைக்கு மகனாகப் பிறந்திருந்தாலும் இவ்வளவு கற்றிருக்க மாட்டேன். இவ்வளவு நேசித்திருக்கமாட்டேன் வாழ்க்கையின் உண்மைகளையும் எதார்த்தங்களையும். இப்படி கதை எழுத நினைத்திருக்க மாட்டேன்.இது மட்டும் சத்தியமான உண்மை .என் வரும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றதோ அது இறைவன் இருந்தால் அவர் விட்ட வழி.இல்லையேல் இயற்கை விட்ட வழி.ஆனாலும் என்ன ?

சிறகடித்துப் பறக்கும் பறவைகளாகவோ , கண்ணுக்குத் தெரிந்த பூச்சியாகவோ , நிழல் தரும் மரமாகவோ , நீண்ட நெடும் பாறையாகவோ , மனிதனை சுமக்கும் மண்ணாகவோ , புன்னகை மின்னிடும் பூக்களாகவோ , மிருகமாகவோ , யாராக எதுவாக எப்படிப் பிறந்தாலும் சரி. கடவுளிடம் கெஞ்சிக் கூத்தாடி மாற்று வரம் பெற்று அடுத்த ஜென்மத்திலும் இந்தத்  தாய்க்கும் இதே தந்தைக்கும் ,என்னைத் தன் உயிராகவே  நினைக்கும் என் உயிரினும் மேலான  அண்ணனுக்குத் தம்பியாகவும் இந்த அழகான குடும்பத்திலேயே இப்படியே பிறக்க ஆசைப்படுகிறேன்.என் ஆசை நியாயமென்றால் கடவுள் இருப்பது உண்மை .இல்லை பேராசை என்றால் எல்லா கடவுள்களும் சத்தியமாகப் பொய் !! நிஜத்திலும் நிஜமான அன்பு கேட்டுக் கிடைக்காத ஒன்று உலகத்தில் இருந்து என்ன பயன் ? நியாயமான வரங்களைக் கேட்கும் என் அன்பிற்குக் வரம் தராவிட்டால் கடவுள் என்று ஒருவர் இருந்து என்ன பயன்....

Forever With Love , Prabhakaran Palanisamy , Karur

9 comments:

  1. அருமை பிரபா !
    தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அற்புதம் !
    உன் ரசிகை என்பதில் பெருமையே !!!
    /////நிஜத்திலும் நிஜமான அன்பு கேட்டுக் கிடைக்காத ஒன்று உலகத்தில் இருந்து என்ன பயன் ? நியாயமான வரங்களைக் கேட்கும் என் அன்பிற்குக் வரம் தராவிட்டால் கடவுள் என்று ஒருவர் இருந்து என்ன பயன்....////
    நல்ல கவிஞன் (பாசமுள்ள மகன் )என மீண்டும் நிரூபித்த பிரபா வுக்கு வாழ்த்துக்கள் !!!!!
    அன்புடன் திவ்யா.....

    ReplyDelete
  2. Awesome da...Excellent narration...Keep rocking...

    ReplyDelete
  3. அன்னா ஸூபர் சொல்லா வார்தை இல்லா ,இதா ரீட் பன்னும்பொதெ கன்னுல இருன்து என்னை அரியாமலெ கன்னீர் வன்திருச்சு ,
    ரொம்ப ந்ல்லா இருக்கு <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3 <3
    இது பத்தாதுனு நினய்குரென் பரவலெ அட்ஜஸ்ட் பனீகொன்கா.....prabha....

    ReplyDelete
  4. Pirappa kurippidra munna varaikkum "un kanavar"a irundha manidhar...amma solli "appa" aana kadhaiya sollaama sollirukra vidham pudhumai! vAzhthukkaL!

    ReplyDelete