Sunday, January 20, 2013

உயிரின் ஸ்வரங்கள் - 50 குறுங்கவிதைகள் !

01



உன் கவிதைகளில் 
நான் கிடைக்கவே 
போவதில்லை 
என்று தெரிந்தும் 
தினம் தினம் 
தேடி அலைகிறேனே..
வெறுப்பெனும் 
சாட்டையடிகளைப் 
பொறுத்துக்கொண்டு நீ 
சபித்துக் கொட்டுவதை 
மனதில் புதைத்து 
அன்பெனும் மருந்தை 
அன்றாடம் தேடுகிறேனே !
நானொன்றும் பாவமில்லை... 
பாவமெல்லாம் 
பாழாய்ப் போன என் 
அன்பு தான் !


02



அர்த்தமற்றுப் 
பிறர் புறக்கணிக்கையில் 
நீயேனும் 
உடனிருந்தாயே 
அதற்காக நன்றி ! 
நெருப்பைத் திண்று 
முடிக்கும் நொடியில் 
ஒரு சொட்டு 
மழையாகவேனும் 
எனக்குள் 
வந்தாயே நீ ! 
அதற்காக நன்றி !



03



உன்னோடு இல்லாத 
ஏக்கத்தின் அனலும்
உன்னோடு இருக்கிற 
சந்தோஷத்தின் சாரலும் 
கலந்து செய்ததே 
என் நாட்களின் தொகுப்பு !


04



என் எல்லையில்லா 
கோபங்களை நான் 
ஒவ்வொன்றாய் 
விளைவிக்கும் 
செல்லச் சிறுநெஞ்சே...அழகி ! 
நான் கொஞ்சிக் கோபிக்கவும் 
கோபித்து அன்பு செய்யவும் 
உன்னைத் தவிர 
வேறெந்த முகவரிக்கும் 
போவதில்லை !


05



ஒரு நொடியில் என் 
உயிரையே 
உருக வைக்கும் 
உலோகக் குரலை 
உன் உயிருக்குள் 
ஒளித்து வைத்ததே 
படைப்புகளில் 
எழிலார்ந்த படைப்பு... 
அதிசயங்களுள் பேரதிசயம் !


06


உன் குரலில் 
இழையோடும் எல்லா 
ஸ்வரங்களையும் 
ஒன்று சேர்த்து 
என் உயிரின் ராகம் செய்து 
நாளெல்லாம் 
என் காது மடல்களில் 
இசைக்கவைத்த 
வாழ்நாள் சாதனையாளர்கள் 
உன் அம்மாவும் அப்பாவும் 


07


உனக்கு நிகராய் 
எதைச் சொல்வதென 
யோசித்து யோசித்து 
ஒவ்வொரு பொழுதும் 
ஒவ்வொன்றாய் 
ஒவ்வொன்றாய் 
நிலவும் நட்சத்திரமும் 
மழையும் மஞ்சள் வானமும் 
காற்றும் கடலும் 
உலகமும் கோள்களும் 
பிரபஞ்சமும் பால்வெளியும் 
அதற்க்கும் அதற்கும் மேலும் 
அத்தனையும் தீர்ந்து கொண்டேயிருக்க 
நீ மட்டும் வளர்ந்து 
கொண்டே இருக்கிறாய் 
அன்பாய் அன்பாய் 
ஆகச் சிறந்த அற்புதத் திருவாய் !


08


நீ தொலைந்து போகும் 
தருணங்கள் எல்லாம் 
நான் தேடுகிறேனா 
என்று நீ பார்ப்பதற்காக 
மட்டும் தான் !
மற்றபடி என்னைவிட்டு நீ
என்றுமே எங்குமே 
பிரிவதில்லை !


09


அன்பென்னும் 
சிறு தூண்டிலுக்குள் 
அழகிய பெரும் 
சுறாக்களும் 
சிலநேரம் 
சிக்கிக் கொள்ளுமே... 
அதுதான் காதல் !
பிரபா


10


"நீ போ"வென்கிறாள்... 
நெருங்கிப் போகிறேன் !
நெருங்கிப் போனதும்
உருகித் தொலைகிறாள் !
கானலான காதல்ப்பேய் அவள் ! :)


11


அவனியின் அத்தனை 
கதவுகளையும் 
பூட்டிவிட்டு 
நிலா தெரியும் 
ஒரு ஜன்னலை மட்டும் 
திறந்து வைத்து 
நீதான் அது நீதான் என 
ரசித்துக் கொண்டிருக்கும் 
ராத்திரிக் கிறுக்கன் நான் !


12


சேரவேண்டிய 
இடத்தைத் 
தேடித் தேடித் 
புறாக்கள் 
தொலைந்து போனாலும் 
சேதி மட்டும் எப்படியோ 
சென்று சேர்ந்து விடுகிறது 
காதல் நெஞ்சங்களின் துடிப்பால் !


13


பூகம்பங்களைத் 
தாங்கிக் கொண்டு 
பூக்களை மட்டும் 
எனக்கு
வளர்த்துக் கொடுக்கும் 
பாசப் பெருநிலம் நீ !


14



நான் தேடிக் கொண்டே 
இருக்கப் படைக்கப்பட்டவன் ...
நீ தொலைந்து கொண்டே 
இருக்கப் படைக்கப்பட்டவள் !
நம்மைச் சேர்த்துவைக்க 
இந்தக் காதல் தான் 
எத்தனை பாடு படுகிறது பாவம் !


15


என் உயிர் உருகி 
ஒருசொட்டாய்ப் 
போனாலும் 
உன் உள்ளங்கை
வியர்வையில் 
கொஞ்சம் பட்டுவிட்டுப் 
போகட்டும் ...
என்னமோ 
என் மோட்சத்திற்கு 
அப்படி ஒரு ஆசை எனக்கு !


16


நிலவு விழித்திருந்தால் 
உலகம் தூங்கிப் போவது தானே இயற்கை ...
நீ விழித்திருந்து என் உடனிருக்கிறாய் 
ஏன் என் உலகமே உறங்காமல் 
சிரித்துக் குதூகலிக்கிறது !


17


என் உ தட்டில் நீ 
ஒவ்வொரு நொடியும் 
ஒட்டவைத்துக் கொண்டிருக்கும் 
சிரிப்புக்கெல்லாம் 
திரும்பி எதையாவது 
செய்ய வேண்டும் 
போலிருக்கிறது ! 
என்னென்னவோ யோசித்தும் 
வேறேதும் செய்யத்தெரியாமல் 
இன்னும் கொஞ்சம் அதிகமாய் 
அன்பு செய்துவிட்டுத் திரும்புகிறேன்..
அவ்வளவே நான் !


18


எவ்வித 
நிபந்தனையுமின்றி 
என்னை நீ நேசிக்கையில் 
என்னை இன்னுமெனக்குப் 
பிடித்துப் போகிறது !


19


உன் சிரிப்பை
என் பார்வையில் 
இருந்து இடைமறிக்கும் 
என் ஒவ்வொரு 
கண் சிமிட்டலும்
எனக்கொரு 
சாபம் தான் !


20


நாம் உயிரின் 
ஆழம் வரை 
ஊடுருவி நேசித்த 
அவ்வுயிரே 
வேண்டி விரும்பிப் 
பிரிவைக் கேட்கையில், 
என்ன செய்வதென்று 
யோசிக்கும் நிலை தான் 
கையறு நிலை !


21


பொய்யென்று 
நன்றாகவே 
அறிந்த வாழ்வை 
மெய்யென்று 
நம்ப வைத்து 
நகர்த்திப் போவது 
அன்பும் அவளும் தான் !


22


வெறுப்பை
விரும்பிக் கொடுத்து 
அன்பைத் திரும்பக் 
கேட்கும் வாழ்க்கை இது ! 
இதும் அழகு தான் ....
ஏ அழகு வாழ்க்கையே..
உனக்கு ஒன்று சொல்வேன் கேள்...
நீ எதைக் கொடுத்தாலும் உனக்கு 
அன்பையே திரும்பக் கொடுப்பேன் !


23


என் எல்லா 
பிம்பங்களையும் 
உடைத்துப் பார்த்து 
உண்மையை தரம்பிரித்து 
ரசித்துப் பார்ப்பதை 
என்றுமே செய்ததில்லை நீ !
நான் யாரோ 
அவனாகவே 
அப்படியே ரசிக்கிறாய் !
இதைவிட ஒருத்தி 
எப்படி என்னை இன்னும் 
அழகாகக் காதலித்திட முடியும் ?!
பிரபாகரன் சேரவஞ்சி


24


ஏகாந்தத்தின் மடியில் 
படுத்துக் கிடக்கிறேன் ... 
எத்தனையோ ராகங்களை 
அது இசைக்கிறது ! 
வேறு வழியின்றி 
அத்தனையும் 
ரசித்துக் கொண்டிருக்கிறேன்... 
வாழ்க்கையின் 
வற்புறுத்தலின் பேரில் !


25


தலையில் அடி 
இடியாய் 
இறங்கும் போதும் , 
வலி பொறுத்து 
அன்பின் ஆழத்தில் 
இன்னும் கொஞ்சம் 
இறங்கிச் பார்க்கும் 
ஆணி நான் !


26

பிரிவு நெருங்கும் பயத்தில் 
நீ விளைவித்துக் கொடுக்கும் அன்பு,
 இனித்தாலும் கசந்தாலும்
 விஷமாய்த்தான் தெரிகிறது !

27


சில 
புத்தகங்களின் 
வரிகளினூடே 
பயணிக்கையில் 
நம் சுயபிம்பம் 
எங்கெங்கும் 
இழையோடும் ... 
அப்படிப் படித்த 
புத்தகத்திலேயே 
நான் மிகவும் 
விரும்பிப் படித்த 
இரண்டு வரிகள் 
உன் உதடுகள் !


28


ஒரு குழந்தை 
வரம் தந்த 
சாமியையும்
வரமாய்க் கேட்குமே !
அதே அழகோடு 
ஆசையோடு 
அன்போடுதான் 
நானும் 
உன்னைக்கேட்கிறேன் !


29


விதியின் கால்கள்
எட்டிஉதைத்து 
என் நேசம்
எத்தனை மூச்சை
இழந்து சாகுமோ 
அத்தனை மூச்சையும்
கட்டிக்கொண்டு
பிரளும்
பாவமாய்
உன் நினைவுகள் !


30


வைத்த கண் 
வாங்காமல் நான் 
பார்த்துக் கொண்டே 
இருக்க , 
விழித் தோகைகள் 
விரித்தாடும் 
வண்ணமயில் நீ !
என்னைப் 
பார்த்துப் பார்த்துக் 
கிறங்கடிக்கும் 
பச்சை மயில் நீ !!


31


அன்பைத் தின்றுதீர்த்து, 
உயிரின் 
அத்தனை இடத்திலும் 
தன்னை அள்ளி 
நிரப்பிக்கொள்ளும் 
வெறுப்பு 
ஒரு கொடிய 
மனம் கொத்திப் பறவை !


32



அன்புன்னை 
வீழ்த்தியதென்று 
பழிசொல்லாமல் 
மீண்டெழுந்து 
உயிரில் ஒட்டியிருக்கும் 
வெறுப்பு துடைத்துத் 
திரும்ப நேசி !
நூறு தடவை 
நொந்த போதும் 
திரும்பஎழுந்து 
நேசிப்பதே அன்பு !
அதுவே வெற்றியும் !


33


நடுநிசியில் 
வீணையாய் 
இசைக்கிற 
உன் குரல் 
என் உயிருக்குத் 
தேவையான 
எல்லா ஸ்வரங்களையும் 
உள்ளடக்கியது !
வாழ்க நீ !


34


வெறுப்பை 
எட்டிப்பிடிக்க 
எத்தனிக்கும் 
மனதை 
கட்டியணைத்துச் 
சொல்லிக்கொள்கிறேன் !
வெறுப்பல்ல 
வாழ்வின் தேவை 
விரும்பி நேசி 
அன்பே அத்தனை 
தேவையும் !



35


பூமி என் மீது தூக்கி எறியும் 
சோகத்துகள்களை எல்லாம் 
நீ தாங்கிக்கொண்டு 
நீ வைத்திருக்கும்
சுகத்துகள்களை மட்டும் 
என்மீது ஒட்டிவிடும் பழக்கம்
ஏன் உனக்கு மட்டும் ?


36


எத்தனை 
வெப்பத்தையும்
தொட்டுத் 
தணிக்கும் 
அன்பின் 
பெருமழை
நீ !


37


குளிர்நாளில் 
ஒரு கோடை 
இரவு இது...
ஒரே வரமாய் 
உன் மூச்சுடன் 
உயிர்வாழ்கிறேன்...
என்றும் சுடுவது 
இன்றேனோ 
குளிர்கிறது !
சத்தியமாய் 
உன் மூச்சுக்குளிரில்தான்
மூழ்கிச் சுகிக்கிறேன் !


38


தவறாக 
எழுதப்பட்ட 
கவிதை நான் !
திருத்தாமல் 
என்னை 
ரசிக்கத தெரிந்த 
ஒரே கவிஞன் நீ!


39


தேசத்துக் 
காற்றெல்லாம் 
தூக்கி வீசட்டும் 
துன்பமில்லை...
எங்கோ வீழ்ந்து 
கிடக்கும் என்னை 
நேசிக்க நீ வருவாய் 
என்பதே என் விதி !
என் விதி நல்லது !


40


விறைத்து நிற்கிற 
செடிகளின் 
மடிகளில் 
சிரித்து சாகும் 
ஒருநாள் பூ நான் !


41


தூக்கி எறியப்படும் 
வேலையில் 
சிரித்துக் கொண்டே 
பறக்கிறேன்... 
என் சிரிப்பு 
கண்ணீரால் மட்டும் 
ஆனது !


42


புரிந்து கொள்ளப்படுவதற்காக மட்டும் 
நீ பிறப்பெடுக்கவில்லை !
புறக்கணிக்கப்பட்டு
வெறுத்தொதுக்கப்படவும் தான் ..
புரிந்துகொள் !


43



இழக்கவேண்டியவை 
எப்போதும் 
நாம் 
அளவின்றி 
நேசித்த 
எதுவாகவோ 
தான் இருக்கும் !


44


எந்த மொழி 
எப்போதும் 
அன்பைச் சொல்கிறதோ 
அதுவெல்லாம் 
உயர்தனிச் 
செம்மொழி !

-பிரபாகரன் சேரவஞ்சி


45


உலுக்கும்
கைகளிலெல்லாம் 
விழுந்தாலும் நான்
நீ வளர்த்த
நாவற்பழம்..
நீ இசைத்த 
உயிரின் ஸ்வரம்...
என்றென்றும் 
உனக்கே சொந்தம் !


46


உன் சுகங்களின்
நாட்குறிப்பில் 
என் பெயர் எழுதாத
பக்கங்கள் எல்லாம் 
எனக்காக 
எழுதப்பட்ட சாபங்கள் !


47


ஒருநாள்
ஓய்ந்து 
நிற்கப் போகும்
கடைசி மூச்சின்
காரணமாகவும் 
உன் அன்பே
இருக்கவேண்டும்...
இருக்கும் !


48


அன்பினால் இயங்கும் பூமியில் 
அத்தனை உயிருக்குள்ளும் 
அதைமட்டுமே
தேடிக் கொண்டிருப்பது
குற்றமென்றால்...
நான் குற்றம் செய்வதற்காக
மட்டுமே பிறந்தவன்
என்று வைத்துக்கொள்ளுங்கள் !


49


எரிநட்சத்திரங்களை
இருள் தின்று
முடிப்பதற்குள் 
எதை நினைக்கிறோமோ
அது கிடைக்குமாம் !
நான் அருகிலிருந்த 
நிலவை
நினைத்தேன்...
நீ கிடைத்தாய் !



50


மௌனத்தைக் கொல்லும் 
வார்த்தைகள் உதடுகளில்
பிறப்பெடுக்க மறுக்கிறது !
மௌனமாய் அது என்னை 
தட்டிக்கொடுத்துச் சொல்கிறது 
என் ஜனனம் 
உன் நிம்மதியின் கருக்கலைப்பு...
ஆழ்ந்து அமைதி கொள் 
இதுவும் கடந்து போகும் ...



4 comments:

  1. இழக்கவேண்டியவை
    எப்போதும்
    நாம்
    அளவின்றி
    நேசித்த
    எதுவாகவோ
    தான் இருக்கும் !
    right said prabha !!!!
    fulfilled with the joy of love while reading ur poems as usual <3
    ~~ur great fan dhivya

    ReplyDelete