Saturday, July 21, 2012

உனக்குப் பிடித்த தலைப்பு - 30 Mod கவிதைகள் (தொகுப்பு 2)




"பூ வாங்கித்தாயேன்"
என்று
கேட்டு வாங்கி
சூடிக் கொண்ட
ஒரே சாமி
நீதான்டி


உலகின்
எல்லா
பூக்களையும்
அன்பெனும்
ஒரேநூலில்
கோர்த்து
செய்த
ஆரணங்கு நீ...
நீ மட்டுமே !

எல்லாம்
மாயையென்றறிந்த
பின்பும்
எனக்குள்
நிறைகிற
ஒருதனி
உண்மை நீ !
உயர்தனிப்
பேதை நீ !
அன்பின்
பேரொளி !
அழகின்
மகரந்தம் !
உண்மையின்
பெருந்திரட்டு !
ஒப்பில்லா
சண்பனி !
 நிலவை
வெய்யில்
ரகசியமாய் முத்தமிடுகையில்
நீ கன்னம்
சிவந்து
போவதேன் !?
உண்மையைச்
சொல்
நிலத்தின்
நிலவுப்
பிரதி(நிதி)தானே
நீ!?
 

 
கரையோரம் நின்றிருந்தேன்,
ஒரு காதற் பேரலை
என்னை
ஆழ்கடலுக்குள்  
அடித்துச்சென்றது.
அன்பு செய்தது. 
அரவணைத்தது. 
அத்தனை ஈரம் 
ஆழ்கடல் மேனி, 
நனைந்தேன் , 
ரசித்தேன்,
நாளெல்லாம் 
வாழ்ந்தேன்.
அதைவிட வேகம் 
காலம்.
பிரித்தது,
 இழுத்தெனைக்  
கொணர்ந்தது
. விட்டென்னை
வீசியது.
நுரைகடற்மணலில் 
நான்மட்டும் 
ஒத்தையாய் 
கிடக்கிறேன்.
ஏ நல்ல விதியே, 
என்னை அள்ளும் 
ஒற்றைஅலையை 
எங்கே கொண்டு 
ஒளித்து வைத்தாய் !?
அலையின் சுவடின்றியென் 
அழுகுரலும் காய்ந்திட்டதே!
அன்பின் நல்லலையை 
இனியேனும்
என்மிசை
சேர்ப்பாயோ!
 
 

இரவோடு
இரவாய்
அன்போடு
அன்பாய்
அமைதியோடு
அமைதியாய்
என்
இதயத்தின்
குருதி
மழையில்
நனைந்து
நொடிநேரத்தில்
ஜனித்த
நூறுவண்ண
ரோஜாப்பூ
நீ !
  
 
என்
இதயமெங்கும்
பற்றி எரிந்து
பின்
சில்லெனக்
குளிரும்
காதல்
ஜுவாலைகள்
உன் பிரிவும்
நினைவும் !
 
மருவிதழ்களின்
மறுபிறப்பு
நீ !

மருவிதழ் : Flower Petals : பூவிதழ்

 ♥
எல்லையில்லா
பேரானந்தம்
எங்கிருந்தாலும்
தூக்கி
எறிந்துவிட்டு
ஓடிவந்து
உன்கைகளைப்
பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து
கொள்ளத்
தான் நினைப்பேன் ..
ஏனெனில்
நீயல்லாத
எதையுமே
நான் நிலையாக
விரும்புவதில்லை
அழகி !

 
கடவுளின்
துகள்களை
நான்
கண்டுபிடித்திருந்தால்
அதற்கு
உன்
பெயரிட்டிருப்பேன்
அழகி !

Higgs Bosson Effect


கடவுளின் காதல் துகள்கள் :
************************

அணுவுக்குள்
ப்ரோட்டான்
நியூட்ரான் ;
அதற்குள்
குவார்க் ;
குவார்க்குடன்
எலெக்ட்ரான் ;
எலக்ட்ரானுக்குள்
லெப்டான் ;
இவைகளை
எல்லாம்
ஒட்டவைக்கிறதாம்
"போசான்"!

அது சரி !
உலகம் செய்யும்
கடவுளின்
துகள்களுக்கு
யாரோ
என்ன பெயரோ
வைத்துக்கொள்ளட்டும் !

நான் அணுவால்
ஆனவன்
என்னுள் இருக்கும்
ஒவ்வொரு
குறுந்துகள்களும்
உன்னாலானவை !
ஆகவே
என்னை நிரப்பும்
கடவுளின்
துகள்களுக்கு நான்
உன் பெயர்
வைத்துக்கொள்கிறேன்
அழகி !

பிரபா
 

ஒரு கதவு
மூடினால்
இன்னொன்று
திறக்குமாம் !
எனக்கு
எந்தக் கதவுகள்
மூடினாலும்
பரவாயில்லை
திரும்பிப் பார்த்தால்
நீ நிற்பாய்
அது போதும் !


வலிமிகு
உன்
கண்ணீரெல்லாம்
அள்ளிக்
கொண்டுபோய்
கவிதையாக்கிக்
கொணர்ந்து
உன்னை
சிரிக்க வைத்தேன் !
ஒரு கவிதையை
சிரிக்க வைத்தேன் ,
ஆகவே நானும்
கவிஞன் தான் !

ஒவ்வொரு
இரவும்
போர்த்திக்கொள்ளும்
மாயோளின்
வர்ணம் நீ ,
மாயோளே நீ !

வெளியிலும்
வரத் தெரியாமல்
உள்ளேயும்
உறையத் தெரியாமல்
யாரிடம் பேசினாலும்
தொண்டைக்குழியில்
கிடந்தழுகிற
கண்ணீரில் எல்லாம்
ஒட்டிக் கிடப்பது
உன் நினைவுகளன்றி
வேறேது அழகி ?
 

நீ நான்
அவன் அவள்
என எங்கோ
யார்யாரோ
நோகடித்துக்
கொண்டுதான்
இருக்கிறோம்
காதலை ;
புரிதலால் ,
புத்தித் திமிரால்,
ஆணவத்தால்,
அன்பின்மையால்
அழகெனும்
மிதப்பால்
அது இதுவென
ஆயிரம் காரணத்தால் ...
ஆனாலும்
அன்பெனும் காதல்
காதலெனும் அன்பு
யாரையும்
நோகடித்த
சேதியில்லை ...
நிஜமெது கேள்
நீ எதிர்த்தாலும்
சொல்கிறேன் ...
மனிதர்களுக்குத்தான்
பாவம்
காதல் யாதெனப்
புரிந்துகொள்ள
வக்கில்லை !

பிரபா


 
 
குரங்கு
பொம்மைகளின்
கைகளில்
இருக்கும்
டெட்டி பியர்
பொம்மைகளைப்
பார்க்கையில்
என் கைகளில்
இருக்கும்
நீதான்
ஞாபகத்திற்கு
வருகிறாய்
அழகி !



 
மேகத்திலிருந்து
சிந்திய
மழைத்துளிகளை
எல்லாம்
தூண்டிலிட்டுப்
பிடித்துக்
கொண்டிருக்கையில்
மழையை விட
நீதான்
அதிகம் வந்து
இதயத் தூண்டிலில்
விழுகிறாய்
அழகி !




எத்தனை முறை
உருட்டினாலும்
இரண்டே விழும் ,
இரண்டும் ஒன்றாய் விழும் ...
விழுவது இதயம் ,
வெல்வது காதல் !
ஒரு வித்தியாசப்
பகடைக்காய் ,காதல் !

 

 

எங்கோ
உன்னைப்
பறக்க
அனுமதித்ததும்
 நான் தான் ,
எங்கெங்கோ
உன்னை தேடி
அலைவதும்
அதே நான்
தான் !  
 

உன்
மௌவல் புன்னகையில்
ஒருகையும்
மௌனப் புன்னகையில்
ஒருகையும்
அள்ளிக்கோர்த்து
அதிலெழும் வாசத்தில்
நிலவொன்று செய்து
"நீ" என்று பெயர்
வைத்து
வானத்தில்
ஏறி விட்டுவிட்டு
வந்திறங்கித்
தரையில் அமர்ந்து
பேசாமல்
பார்த்துக் கொண்டே
இருக்க ஆசை !

பிரபா


வெறும்
மண்ணாய்
இருக்கும்
என் நெஞ்சை
எல்லாம்
அள்ளிக்குவித்து
அன்புக்கோயில்
கட்டி
விளையாடும்
காதல்,
உனக்கு மட்டுமே
தெரிந்த
உன்னதக்கலை !


 
எத்தனை
கோடிகள்
கொட்டிக்
கொடுத்தாலும்
நான் விட்டுக்
கொடுக்காமல்
இருக்கும்
ஒரே இடம்
உன்
ஐ.லவ்.யூவின்
இடம்
மட்டும் தான் !
அதுதான்
எப்பவுமே
டாப்பு !


என்றேனும்
என்
மகிழ்ச்சிநியூரான்கள்
முழுதும்
அலையடித்து
நான் கிறங்கிக்
கிடந்தால்
அதற்குக்
காரணம்
ஜில்லெனும்
உன் முத்தமாகத்
தான் இருக்கும் !


Pic By : Makka Photography

நிமிடத்திற்கு
நூறு
முறையாவது
உன்னைப்
பார்ப்பேன் !
அப்போதெல்லாம்
ஒரு ஆயிரம்
புன்னகையாவது
உன் கன்னக்குழியில்
இருந்து
பறந்து வந்து
என் உதடுகளில்
ஒட்டிக் கொள்ளும் !


"நீ"
என்பதிலும்
"நான்"
என்பதிலும்
ஒளிந்திருக்கும்
சுயநலச்
சாயத்தை
அழித்து
அதில்
அன்பு கலந்து
"நாம்"
என்றாக்குவது
காதல்


 
எந்த
வகையான
பைத்தியம்
வேண்டுமானாலும்
எனக்குப்
பிடித்துவிட்டுப்
போகட்டும்....
உன் அன்பை
மறக்கடிக்கிற
பைத்தியத்தைத்
தவிர !



சொர்கத்தின்
சாவிகள்
மொத்தம்
ரெண்டு !
ஒன்று நீ
இன்னொன்று
காதல் !
ரெண்டயுமே
கடவுளிடமிருந்து
திருடிக்
கொணர்ந்துவிட்டேன் !:)


   
எத்தனை
கோபமானாலும் ,
தூங்கி எழுந்து
"ராத்திரி நமக்கு
ஏதும் சண்டையா
என்ன ?"
என்று கேட்கிற
உன்னை நான்
என்ன தான்
செய்வது ?
மேலும்
காதலிப்பதைத்
தவிர!
 

Saturday, June 23, 2012

அத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥




தெளிந்த நன்
மழை நீரை
மட்டும்
அருந்தி வாழும்
அது
சாதகப் பறவை !
தேனினும் இனிய
உன்னை மட்டும்
எழுதும்
நான்
சாதகக் கவிஞன் !


 
ஒரே ஒரு நாள்
நம் தூக்கத்தை
கலைத்து
எழுப்பியது
காதல்...
இன்று
ஒவ்வொரு
இரவிலும்
அதைத்
தூங்கவிடாமல்
கையிலும்
தோளிலும்
நெஞ்சிலுமிட்டுக்
கொஞ்சிக்
கொண்டிருக்கிறோம் !
நன்றாக
நம்மிடம்
மாட்டிக்கொண்டது
காதல் !
 
உனக்கான
கவிதைகளாய்
என் எல்லா
நோட்டுகளிலும்
எழுதி வைத்தேன் ...
நான் விரும்பி
செய்த ஒரே
வீட்டுப்பாடம்
நீ மட்டும் தான்
அழகி !!



என் மௌனம்
உன் பெரும்
தேவை
என்கிற போது
என்அன்பின்
மொழிகள்
அனாதையாகிப்
போகிறதே
அதை நான்
என்ன செய்ய ?
ம்ம் ? என்ன செய்ய ?






எண்ணற்ற
உறவுகளுடன்
தொடங்கிய
வாழ்க்கையின்
எல்லை
எங்கிருந்தாலும்
பரவாயில்லை
அங்கு நீ
மட்டும் நில் !
உன் மடியில் என்
எல்லா
மூச்சையும்
முடித்துக் கொண்டு
காற்றோடு
காற்றாகிவிட்டால்
சந்தோஷம் !
 
மண்ணை
மழை
முத்தமிடுகையில்
எழும்
வாசத்தையும்,
உன்னை
நான்
முத்தமிடுகையில்
எழும்
வெட்கத்தையும்
ஒன்றாய்க்
கலந்து
ஓர் உணவு
செய்து
அதற்கு
அன்பெனப்
பெயரிட்டுத்
தின்று கொழுக்க
வேண்டும்....
உயிரெல்லாம்
நீயாகவும்
உணர்வெல்லாம்
மழையாகவும்
சில்லெனக்
குளிர வேண்டும் !


வரம்
கேட்கவில்லை,
நீயாய்
வந்தாய் .
சாபமும்
கேட்கவில்லை,
வந்த வழி
சென்றாய் .
விதியை
நொந்து
கொள்ள
விருப்பமில்லை.
உயிரும் உடலுமே
இங்கு நிலை
இல்லை !
இருப்பினும்
தூக்கிக் கொஞ்ச
ஆளில்லாமல்
தனித்துக் கிடக்கும்
அன்பை
நினைத்தால்
தான்
கத்தி அழத்
தோன்றுகிறது !
பாவம் !
ஒத்தையாய்
நிற்கிற
அத்தனை
அன்பும்
பாவம் .

 ●
ஒவ்வொரு
எழுத்தும்
உன்னை
எழுதிவிட்டு
எங்கேயோ
இருக்கிற
ஏதோஒரு
பெண்ணுக்காக
எழுதியதாக
நடிப்பது
நம் காதலுக்கு
நான்
வேறு வழியின்று
இட்டுக்
கொள்ளும் சூடு !

உன்னைப்
பிரதி எடுத்து
இடது கையில்
வைத்துக் கொண்டு
வலது கையில்
எல்லா
அழகையும்
தத்ரூபமாய்
வரைந்துவிட்டது
இயற்கை ...
சப்தமின்றி
பின்னால்
நின்று ரசித்த
வகையில் நான்
இயற்கையைவிட
இன்னும்
கொடுத்தவைத்த
காதலனாகிவிட்டேன் ! !
 
நீ
பார்த்த
நொடியிலேயே
பிடித்துப் போன
பொம்மையும்
பார்க்கப் பார்க்கப்
பிடித்துப் போன
நானும் என
ரெண்டு பெரும்
கொடுத்து
வைத்தவர்கள் !
உன் அணைப்பிலேயே
ஒவ்வொரு இரவும்
தூங்க !

 
வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

 
என் கவிதை
வீட்டில்,
எல்லாம் "நீ"யாய்
நிறைத்துப்
பூட்டிவிட்டு,
சாவியை
எங்கேயோ
தொலைத்து
விட்டதைப்
போலிருக்கிறது
இந்த இரவு !
 


எங்கேயோ
பாறைகளின்
இடுக்குகளில்
பூத்திருக்கும்
ஒற்றை மலரைப்
பார்த்து
வேதனைப்
படாமல்
இருக்க
முடிவதில்லை !
அது நீ இல்லாத
நானாகவே
தெரிகிறது !
 
 
உன் மத்தாப்புப்
பேச்சு
எல்லோருக்கும்
பெருவரம் .
எனக்கும் உன்
மௌனமும்
சேர்த்து !

Tuesday, June 12, 2012

இந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல ! - 11 குட்டிக் கவிதைகள் !



நேரடியாய்
கடவுளின்
தோட்டத்தில்
இருந்து நான்
ஆசைப்பட்டுத்
திருடிக் கொணர்ந்த
அன்பு மல்லிச்சரம்
நீ !



தேன்கூடு
நான் !
என்னை
இறுக்கமாகக்
கட்டிக்
கொண்டிருக்கிற
தேனீக்கள்
உன்
நினைவுகள் !



உன்னைப்
பார்த்துக்
கொண்டே
இருப்பது
மட்டும் தான்
என் நெஞ்சுக்குப்
பிடித்த ஒரே
இனிய தவம் !



என்னென்னவோ
எழுதும்
அறிவுப்புலமை
நிறைந்த
பெண்களின்
கவிதைகளை விட
என்னை
கிச்சுக் கிச்சு
மூட்டி சிரிக்க
வைக்கும் உன்
காமெடிக்
கவிதைகளே என்னை
அதிகம் ஈர்க்கிறது
அழகி :)



உன் சிரிப்பிற்கு
நான் காரணமாகும்
ஒவ்வொரு தருணமும்
கடவுள் - தான்
சேர்த்து வைத்திருக்கிற
வரப் பெட்டியிலிருந்து
ஒரு முத்தை
என் மனதிற்குள்
தவற விடுகிறான் !



அமைதியான
சப்தங்கள்
கைகோர்த்துக்
கொண்டு
பேசுகிற
பேரழகான
கவிதை
உன் மூச்சு !



எந்த
மொழியும்
செம்மொழிதான் ,
உன்னைப் போல்
ஒரு பேரெழில்
பெருங்கவிதையைப்
பெற்றெடுத்தால்
♥ 


அன்பிற்குத்
தெரிந்ததெல்லாம்
உள்ளதை
உள்ளபடி ரசிப்பதே !
கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..

கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !

நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !

 
என் உள்ளே போகிற
மூச்சும் சரி ,
வெளியில் அனுப்பப்படுகிற
மூச்சும் சரி
எல்லா மூச்சின் முகப்பிலும்
உன் பெயரையே
முகவரியிட்டு
அனுப்புகிறேன் ! 
    


பூக்களின் இதழ்களைத் 
தொட்டுப் பார்க்கையில் 
எங்கிருந்து தான் 
ஆர்ப்பரித்து வருமோ 
உன் வாசம்... 
என்னை ஒட்டுமொத்தமாய் 
சுற்றிச் சூழ்ந்த 
கட்டித் தழுவிக் 
கொள்கிறது அழகி ! 

 

Wednesday, May 30, 2012

ஒரு பூ பிறக்கிறது - என் முதல் சிறுகதை

அது ஒரு சித்திரைத் திங்கள் கடைசி வாரம் .அக்னி நட்சத்திர வெய்யில் அழகாய் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது.வழக்கம் போலவே மூன்று மணி முப்பது நிமிடங்களுக்கெல்லாம் எழுந்த நீ , நான்கு மணிக்கெல்லாம் சென்றுவிட்டாய் .உன் கணவனையும் கூட்டிக்கொண்டு.நீங்கள் உங்களுக்காய் வாடகைக்கு வாங்கி வைத்திருக்கும் சொத்து , அந்தப் பத்தடி நீலமோ ஐந்தடி அகலமோ  கூட இல்லாத தேநீர்க்கடையைத் திறக்க.ஆம் நீங்கள் இருவரும் நிற்குமிடம் அளவிற்கு அவ்வளவு பெரிய தேநீர்க்கடையை சேரவஞ்சியின் வரலாறு பார்த்திருக்குமோ என்னவோ சந்தேகம் தான் .

நிற்குமிடத்தை மட்டும் சொந்தமாகக் கொடுத்தால் திண்மை நிறை நல்லோர் என்ன செய்தேனும் உயரத்தை தொட்டுவிடுவார்கள் . அந்த ஆயிரத்தில் இருவராக நீங்கள் இருவரும் இன்று இடம் பிடிப்பீர்கள் என்று உலகம் கண்டிப்பாக நினைத்துப் பார்த்திருக்காது . அன்றைய உங்கள் சுற்றம்  உங்களைப் பழித்திருக்கும் , சிரித்திருக்கும் , ஏளனம் செய்திருக்கும். நீங்களாவது பிழைப்பதாவது என்று ஒரு கூட்டம் உங்களை கண்டிப்பாய் கேலி செய்திருக்கும். இருப்பினும் நீங்கள் யார் ? குணக்குன்றுகளும், 'உழைத்து ஓடாய்த் தெய்வதெ'ன்ற சொல்வழக்கின் மொத்த அர்த்தமும் அல்லவா ! கடை திறந்து  நிமிடங்கள் பத்து இருபதென்று பறக்கிறது  . முதல் நாள் களைப்பே நீங்கியிருக்காத உனக்கோ மறுநாள் பொழுது ஏன்தான் சீக்கிரமாய் விடிந்ததோ . உனக்கு ஓய்வு வேண்டும் என்று இரவின் மீது என் கோபமும் , நீ உழைத்து முன்னேற வேண்டுமென்று சீக்கிரமே விடிந்த காலையும்,  இரண்டுமே என் மனதில் சண்டையிட்டு சமாதானமாகிறது.

பாத்துக்கப்பா... என்று கணவரிடம் சொல்லிவிட்டு அரை மைல் தொலைவிலிருக்கும்  குழாயடிக்குச் சென்று தண்ணீர் சுமந்து வருகிறாய். நீ சுமந்து வருவது தண்ணீர் குடத்தை மட்டுமல்ல தளிர் விடும் பிஞ்சு உயிர் என்னையும் தான் . ஆம் உறக்கமின்றிக் கண்விழித்து ஒருபக்கமாய்ப் படுத்திருந்து , நான் ஆசுவாசமாய் மூச்சுவிட நீ அழுங்காமல் மூச்சுவிட்டு, என் பொருட்டு நீ எத்தனையோ உண்ண மறுத்து , காற்றும் மழையும் வெயிலும் கடந்த காலமெல்லாம், நான் நனையவோ , துடிக்கவோ , வெம்மையில் சுருங்கவோ கூடாதென்று வயிற்றில் குடைபிடித்து,  நான் அழாமலிருக்க நீ சிரித்து , உன் சிரிப்பின் சங்கீதங்களை மட்டும் எனக்கென உள்ளே அனுப்பி வைத்தாய்.. நான் யார் ? உன் மகனல்லவா ? உன் சோகம் புரியாதா ? உன் அன்பு தெரியாதா ? உன் அணைப்பும் ஆர்ப்பரிப்பும் எதுவென்று தெரியாதா எனக்கு  ?

அழுதேன்! ஒருதுளி உயிர்த்துளி, அந்த ஒப்பற்ற அன்பாலான வெண்ணிற மழைத்துளியாய் உன் கர்ப்பப்பைக்குள் விழுந்த போதே அழுதேன். . எவ்வளவோ லட்சியங்களை கனவுகளை சுமந்துகொண்டும் ஒரு காலத்தில் எட்டு பைசா பத்து பைசா சம்பளம் வாங்கின அப்பனும் ஆத்தாளும் டவுனுக்குப் பிழைக்க வந்து அக்கம் பக்கம் இருப்போரின் அன்பைப் பெற்றீர்கள் . நீங்களும் அன்பு வளர்த்து என்னையும் பிரசவித்து வளர்த்து வாலிபம் செய்ய எத்தனை சிரமப் படப் போகிறீர்களோ என்று அழுதேன்.

சிரித்தேன், மகிழ்ந்தேன், மறுநொடி நினைத்தேன் இப்படி, ஐம்பது ரூபாய் சம்பாத்தியத்திற்கு வழியில்லாத நேரத்திலும் , வயிற்றில் நான் முண்டியடித்துக் கத்திய போதும் வெளியில் விடச் சொல்லி உன் வயிற்றை நான் எட்டி உதைத்தபோதும் , எவ்வளவு அழகாய் பார்த்தது சிரித்துக் கொண்டும் , தாங்கிக் கொண்டும் , தடவிக் கொடுத்தும் இருந்தாய். அதை பார்த்து சிரித்தேன். "அம்மா" என கத்தி அழவேண்டும் போல இருந்தது ,இன்னும் எத்தனை நாட்கள் நான் உள்ளேயே இருக்கட்டும் ? என்னை நீ ஒரு ஜென்மம் முழுதும் கூட வயிற்றிலேயே சுமந்து கொண்டிருப்பாய் , ஆனால் எனக்கோ பத்து மாதத்திற்கு மேல் உன்னை சிரமப்படுத்த எண்ணம் ஏதும் இல்லை.உயிர்க்கதவுகளில் உதைத்தேன்.எட்டி என் அன்பையெல்லாம் சேர்த்திக் கொண்டு பிஞ்சுக் கால்களால் அப்படி உதைத்தேன்.வெளியில் விட்டுவிடு . என்னைச் சுமந்த வயிற்றில் நடத்திய சுற்றுப்பயணம் போதும் . என்னைத் தாங்கப் போகும் கைகள் எவை ? என்னை முத்தமிடப் போகும் கைகள் எவை ? என்னைப் பார்த்து ரசிக்கப் போகிற கண்கள் எவை ? என்னைத் தடவிப் பார்க்கும் கைகள் எவை என்று பார்க்க ஆசை. அதுதான் வெள்ளிக்கிழமை என்று கூட பார்க்காமல் என் உயிரின் பிறப்பிடத்தை எட்டி உதைத்தேன்.

நீ தண்ணீர் சுமந்து வந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது எனக்கு .நீ தூங்கிக் கொண்டிருப்பாய் என்றல்லவா நினைத்து உதைத்தேன். என்னவோ... நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத வலியை கொடுத்துவிட்ட சோகத்தில் எப்படியேனும் உன் உயிர்க்கதவுகளுக்குள் புகுந்து வெளியில் வந்து விட நினைத்தேன்.அத்தனை வலியிலும் இடுப்பில் சுமந்து வந்த தண்ணீர் கொஞ்சமும் சிந்தவில்லை. அன்பு சுமந்த மனிதர்களையும் , அன்பு கலந்து நீ செய்கிற எந்த வேலையையும், சிதறாமல் தாங்கிப் பிடிப்பதில் உனக்கு நிகர் நீயே . 

"வலி உயிர்போகிறது " என்று உன் கணவரைக் கூட்டிக் கொண்டு விரைந்து நடந்தாய்.அப்போதெல்லாம் ஆட்டோவா , பஸ்ஸா , காரா ? சைக்கிள் கூட இல்லாமல் அருகிலிருக்கும் நிர்மலா மகப்பேறு மருத்துவமனைக்கு நடந்தே சென்றிருக்கிறீர்கள் இருவரும்  . மருத்துவமனை கடிகாரம்  மணி 5 .30 :  என்று அறைகூவல் விடுக்கிற நேரம் . அன்று தான் ஊரின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் பூச்சொரிதல் விழாவும் கூட . சித்திரை மாதம் கடைசி வெள்ளி . அப்பாடா., என் காத்திருப்புகள் முடிந்துவிட்டது .

எங்கே உன் உயிரைத் தொலைத்துவிடப் போகிறேனோ என்கிற வலி எனக்கு. எங்கே உள்ளிருக்கும் என்னைத் தொலைத்து விடப் போகிறேனோ என்கிற வலி உனக்கு . இருவருமே துடித்தோம்.என் உயிரே.என் உயிரின் உயிரே.நீ யாரென்று பார்த்து மகிழ , அழுது மகிழ , சிரித்து மகிழ வேறு வழியும் தெரியவில்லை எனக்கு.வந்துவிட்டேன்.வந்தேவிட்டேன்.,பேரிடியாய் வானக் கதவுகளை திறந்துகொண்டு குருதி மழைபொழிய உலகத்தின் வெளிச்சத்தில் வந்து விழுந்தேன்.சந்தோஷப் பெருமூச்சு,உனக்கும் சரி எனக்கும் சரி .ஒப்பில்லா உயிர்மூச்சு .எனைப் பார்க்க ஏங்கிக் கிடந்தவள் கிறங்கிக் கிடந்தாலும் கொஞ்சமாய் விழித்துப் பார்க்கிறாய் .உன்னைப் பார்க்க ஓடோடி வந்தவன் உன்னை இவ்வளவு பாடு படுத்தி இருக்கிறேனே என்று நினைத்தால் மேலும் அழத் தோன்றியது .அழுதேன்.அன்றிலிருந்து இன்றுவரை உனக்குக் கொடுத்த மரணவலி என்று என் நினைவை முட்டினாலும் அழுவேன். 

நீயும் உன் கணவனும் ஏன் இத்தனை வைராக்கியத்தை சுமந்தவர்களாக இருந்தீர்கள்?  உன் பெயரை எழுதக் கூடத் தெரியாத நீயும், தன் பெயரை எழுதவும் படிக்கவும் தெரிந்துகொண்ட அப்பாவும் அண்ணனைப் போலவே என்னையும் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்தீர்கள் .இன்று நானும் சரி, அண்ணனும் சரி பொறியாளர்கள்.பத்து பைசா சம்பளம் வாங்கியவர் நீங்கள்.உங்களால் எங்களைப் பத்து பட்டப் படிப்புக் கூட படிக்க வைக்க முடியுமென்று நம்பினீர்கள். நடந்தது. இன்று அதே நம்பிக்கையும் , சகமக்களிடம் பேரன்பும் , பசித்த மானுடத்திற்கு அன்பால் அன்னமிட்டு பசியாற்றும் பண்பும் .இல்லாத ஏழைகளுக்கு என்னால் ஆன  உதவி  எதுவாயினும் செய்யவும் எத்தனையோ பண்புகளைக் கற்றுக் கொண்டேன்.

அன்று பார்த்த அதே அம்மா, இன்றும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மோர் கடைந்துகொண்டு . ஐந்து மணிக்கெல்லாம் கடைக்குப் போகிறாய். அப்பாவும் நீயும் தேநீர்க்கடையே உங்கள் திருப்பதியாகத் தினமும் அங்கேயே உழைத்துக் கிடக்கிறீர்கள். இடத்தையும்,அதன் அளவையும் , மாற்றிக் கொண்டீர்கள் .உங்கள் தொழிலையோ குணத்தையோ அன்பையோ எதையுமே நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை .நான் இன்றும் என்னால் இயன்ற அளவிற்கு மேல் உங்களை ஏதாவது ஒரு வழியில் இம்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன் , குணமும் கோபமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற எல்லா குறும்புக் குழந்தைகளையும் போல. ஆனாலும் அதற்குமேல் அளவற்ற அன்பையும் நேசத்தையும் உங்கள் மீது சுமந்துகொண்டுதான் இருக்கிறேன்.

உங்கள் இருவர் மீதும் என் பெருமை இதுதான். உலகத்தில் வேறு எந்தத் தாய்க்குப் மகனாகப் பிறந்திருந்தாலும் இத்தனை அன்புடன் நான் இருந்திருக்க மாட்டேன்.இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டேன்.உலகத்தில் வேறு எந்தத் தந்தைக்கு மகனாகப் பிறந்திருந்தாலும் இவ்வளவு கற்றிருக்க மாட்டேன். இவ்வளவு நேசித்திருக்கமாட்டேன் வாழ்க்கையின் உண்மைகளையும் எதார்த்தங்களையும். இப்படி கதை எழுத நினைத்திருக்க மாட்டேன்.இது மட்டும் சத்தியமான உண்மை .என் வரும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றதோ அது இறைவன் இருந்தால் அவர் விட்ட வழி.இல்லையேல் இயற்கை விட்ட வழி.ஆனாலும் என்ன ?

சிறகடித்துப் பறக்கும் பறவைகளாகவோ , கண்ணுக்குத் தெரிந்த பூச்சியாகவோ , நிழல் தரும் மரமாகவோ , நீண்ட நெடும் பாறையாகவோ , மனிதனை சுமக்கும் மண்ணாகவோ , புன்னகை மின்னிடும் பூக்களாகவோ , மிருகமாகவோ , யாராக எதுவாக எப்படிப் பிறந்தாலும் சரி. கடவுளிடம் கெஞ்சிக் கூத்தாடி மாற்று வரம் பெற்று அடுத்த ஜென்மத்திலும் இந்தத்  தாய்க்கும் இதே தந்தைக்கும் ,என்னைத் தன் உயிராகவே  நினைக்கும் என் உயிரினும் மேலான  அண்ணனுக்குத் தம்பியாகவும் இந்த அழகான குடும்பத்திலேயே இப்படியே பிறக்க ஆசைப்படுகிறேன்.என் ஆசை நியாயமென்றால் கடவுள் இருப்பது உண்மை .இல்லை பேராசை என்றால் எல்லா கடவுள்களும் சத்தியமாகப் பொய் !! நிஜத்திலும் நிஜமான அன்பு கேட்டுக் கிடைக்காத ஒன்று உலகத்தில் இருந்து என்ன பயன் ? நியாயமான வரங்களைக் கேட்கும் என் அன்பிற்குக் வரம் தராவிட்டால் கடவுள் என்று ஒருவர் இருந்து என்ன பயன்....

Forever With Love , Prabhakaran Palanisamy , Karur

Saturday, May 26, 2012

திவ்யப் பேரொளி


♥ என் கவிதைகள்
எங்கே தொலைந்தன
என்று என்னைக்
கேட்பதற்கு முன் 

ஒரு முறை
உன் வீட்டு
நிலைக்கண்ணாடியின்
முன் நின்று பார் ...

திருடிப் போன
களவாணிக் காரணம் ,
திமிரும் அழகும் சேர்ந்த
திவ்யப் பேரொளியாய்
நின்று கொண்டிருக்கும் ! ♥
 

Thursday, April 5, 2012

இப்படி இருந்திருக்கலாம்....

கண்காணா 
தூர தேசத்தில்

ஆளரவமில்லாத 
அடர்க்காட்டில்

விண்ணின்று 
கொட்டும்
அருவியின்  
வழியில்
  
பாறையில் 
பட்டுத் தெறித்த 
கொஞ்சம் 
நீர்த்துளியால்

உயிர்பெற்று 
வளர்ந்த 
பூக்களின்  
இதழ்களுக்குள்  

ஒளிந்து 
கொண்டிருக்கும் 
ரெட்டைத் 
தேனீக்களாய் 
நாம் 
பிறந்திருக்கலாம்....!!

நம் மதம் 
புன்னகையாகவும்

நம் சாதி
ஈக்களாகவும்

நம் சொந்தங்கள்
பூக்களாகவும் 
இருந்திருப்பார்கள் !

நாமும் யார் 
எதிர்ப்பும் இன்றி 
சேர்ந்தே
வாழ்ந்திருந்திருக்கலாம்!  
  

Sunday, April 1, 2012

போறேன் போ.. வேண்டாம் போகாத !

"வேண்டாம் போகாத"
என்று சொல்வேன்
என்கிற கற்பனையில் 
"போறேன் போ"  
என்று சினந்து 
போய் ஒளிந்துகொள்கிறாய்...
ரொம்ப நேரம் ஆகியும் 
"எங்க போன "
என்று கேட்காமலேயே 
இருக்கிறேன் நான் !
திரும்ப வந்துநீ 
சட்டையைப் பிடித்து
கன்னத்தில் அறைந்தென் 
நெஞ்சோடு முகம்  
  புதைத்துக் கொண்டு
"போடா நாயே பேயே
பண்ணி லூசு "  
என்று உதிர்க்கும் 
கவிதைகளைக் 
கேட்டு மகிழத்தான் 
அத்தனை 
திருட்டு மௌனம் 
காத்தேன் என்பது 
நீ புரிந்து கொள்ளாத 
உண்மை அழகி !