Thursday, August 16, 2012

கொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்


●
நீதான்
என் வரமென்றும்
இல்லை இல்லை
நான்தான்
உன் வரமென்றும்
இருவரும்
செல்லமாய்
மாறி மாறி
சண்டையிட்டுக் 
கொள்ளும்
தருணங்கள்..
வரங்களுக்குள்
ஒளிந்திருக்கும்
குட்டி வரம் ! 
●



● 
நாம்
பகிர்ந்துகொண்ட
முத்தங்களை
யார் ஞாபகப்
படுத்தினாலும்
அதுவும்
கொண்டாடப்
படவேண்டிய
நிமிடங்கள்தான் !
●
● 
கவிதையோ,
அழகோ,
எதையும் நாம்
புதிதாய் 
படைக்கப் 
படவேண்டிய
அவசியமில்லை
அது
இயற்கைக்குள்ளேயே
ஒளிந்திருக்கிறது !
நமக்கு
ரசிக்கத் தெரிந்தால்
மட்டும் போதும் 

● 



● 
மண்ணை
முத்தமிட்டுத்
திரும்பும் வழியில்
என்மீது படும்
சாரல்கள்
அனைத்திலும்
உன் வாசமே
கலந்திருக்கிறது!
.
மீதமிருக்கும்
மழையிலும்
நீதான்
நிறைந்திருப்பாயோ ?
.
ஒரு நாள்
எப்படியாவது
ஓட்டமாய்
ஓடிப்போய்
எல்லா மழையிலும்
நனைய வேண்டும்
நனைந்தே
ஆக வேண்டும் !
● 

♥
மழைக்கவிதை
அவ்வளவு தானா?
என்கிறாய்...
மழைவிட்டாலும்
தூவானம்
விடாததைப் போல்
யார் விட்டாலும்
என்னை நீ
விடுவதே இல்லை!!
♥

●
நேயர்
விருப்பமாய்
நீ ஒரு கவிதை
கேட்கையில்
மட்டும்
நான் ஒருநிமிடம்
கம்பனையும்
கண்ணதாசனையும்
விடப் பெருங்கவியாக
உணர்கிறேன் !
●


●
என்றென்றும் என்
தமிழில் கொட்டிக்
கிடக்கிற
எல்லா வாசமும்
நீதான் !
அன்று சொன்னேனே..
அதேதான் இன்றும் !
●

●
செவ்வாய்
கிரகத்திற்கு
மட்டும் ரெண்டு
நிலவு..
அதென்ன பூமிக்கு
மட்டும் ஒன்று ?
என கடவுளைப்
பார்த்து கேள்வி
கேட்பவர்களுக்கு
என்ன தெரியும் ?
இன்னொரு
நிலவைத்தான்
நான் திருடிக்
கொணர்ந்து
விட்டேனே....
என் வீட்டிற்கு
வேண்டுமென்று !
●


♥
உன் தோள்
சாய்ந்து
கிடப்பதே
அன்பின்
பெருவரம்தான் ! 
♥


●
உன் இதழ்களைப்
பிய்த்து என்னைச்
சுற்றிலும்
நிரப்பிக் கொள்வேன்,
பின் உன்
மகரந்தங்களின்
மடியில் கிடந்தது
தூங்குவதைப்போல்
நடிப்பேன்...
பின் தூங்கிவிடுவேன்...
அதிகாலை ஆறு
மணிக்கெல்லாம்...!
●

♥
நீ தூங்கும்
அழகைப் பார்க்க
இரவில் மட்டும்
வந்து போகும்
நிலவு
ஒரு இனிய
திருட்டுக்
களவாணி !
♥
 ● 

தனிமை
என்பது
எனக்கும்
காற்றுக்கும்
நடக்கும்
பெரும்யுத்தம் !
உள்ளே இழுக்கிற 
ஒவ்வொரு காற்றிலும்
உன்னை இழுத்துக்

கொள்வேன்!
இமைப்பதற்குள்
இன்னொருபுறம்
காற்றுன்னை
இழுத்துச் செல்லும் !
தொடர்கிற
யுத்தத்தில்
தோற்ப்பேனோ
ஜெயிப்பேனோ
இருக்கிற
நிமிஷத்தில்
எல்லா மூச்சும் 
நீயாய் இருக்கிறேன்..
அது போதும் !
● 
●
பூ...க்...க...ள்
என்று சொல்லி
முடிப்பதற்குள்
முதல் ஆளாக
வந்து
என் நினைவில்
ஒட்டிக்கொள்பவள்
நீ
●

♥
எந்த ரோஜாவுக்குத் தான் 

உன் கூந்தலில் 
உறைந்து மயங்க 
ஆசையில்லை 
சொல் ?
பூக்களின் 
குலதெய்வம் நீ ! 
அவைகளின் 
கோயில் உன் 
கூந்தல் !
♥


Photo Copyrights : Hemalatha Gopalakrishnan

♥

எல்லா குழந்தைகளுக்குள்ளும்
உன் சிரிப்பை புகுத்தி
ஒளித்து வைத்த இறைவன்
ஆகச் சிறந்த படைப்பாளி !
அதை எப்படியோ
கண்டுபிடித்து ரசிக்கும்
நான் ஆகச்சிறந்த
காதல் விஞ்ஞானி !
♥

  My Dear Readers!  Thanks for Your Wonderful support all the way You shower 
Whenever I write something.  
New Readers,  Get me @ my Facebook ID  for
 Instant Updates as well : 
பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha)  .