Thursday, May 2, 2013

அன்புக்கோர் நிழலுண்டு - 35 குறுங்கவிதைகள்

                        Connect me through Facebook @ : பிரபாகரன் சேரவஞ்சி




இந்தக் காதல் இருக்கிறதே காதல்
இது எத்தனை 
நட்சத்திரங்கள் 
இருக்கிறதோ 
அத்தனை கவிதைகளை 
எழுதி உன் இதய ஓரத்தில் 
ஒட்டிவிடத் துடிக்கிறது !
எது சாத்தியம் இல்லையோ 
அதை மட்டுமே 
செய்யத் துடிக்கிறது !
எல்லாம் உனக்காக !




••

ஒரு பெரும் புயலின்
சினக்கயிற்றில்
சிக்குண்டு அழும்
பட்டாம்பூச்சியின்
குரல்தான்
நம் காதலின் குரலும் !
நாம்
எத்தனை ஓலமிட்டாலும்...
அதில் எத்தனை
நியாயமிருந்தாலும்...
அது யாருக்கும்
கேட்கப் போவதில்லை !
••



••
என் உச்சந்தலையில் 
ஒரு முத்தம் 
கிடைக்கையில் 
குழந்தை நீயா நானா 
எனக் குழம்பித்தான் 
போகிறோம் !
எது என்னவோ..
இந்த அன்புமட்டும்
ஆயிரம் கோடி அழகு !
••



••

கடவுளின்
துகள்களை 
துளையிட்டு 
நூறாய் ஆயிரமாய் 
நூறாயிரமாய் 
பிரித்துப் பார்த்தாலும் 
அதற்குள்ளும் நீ இருப்பாய் !
நீ இல்லாத எதுவுமே 
எங்குமே இல்லை !
இது என் உலகம் !

••

                     Connect me through Facebook @ : பிரபாகரன் சேரவஞ்சி



••
இருந்துமிருந்தும்
கடைசி கடைசியாய்
எப்படியோ
என்னை ஏன்
பிடிக்கும்
என்பதற்கு 
ஒரு காரணம்
கண்டுபிடித்தாய் பாரேன் !
அபாரம் !
காரணமே இல்லாமல்
பிடிக்குமாமே !
ஹ்ம்ம் !? நன்றி !
••

••
நான் பேசுவதை
நிறுத்திக் கொள்கிறேன்.
இனி என் அன்பின் கூட்டிற்குள்
ஒளிந்திருப்பவை யாவும்
வாய் திறந்து பேசட்டும் .
நீ ஓட்டிவிட்டுப் போன
அத்தனை சந்தோஷமும்
பேசட்டும்..
நீ இல்லாத இழப்பின்
அழுகுரல் பேசட்டும்..
இன்னும் என்
உயிர் சிதைக்காமல் வாழ்விக்கும்
மென்தென்றல் பேசட்டும்...
ஊடே ஒவ்வொரு
காற்றின் துகல்களுக்குள்ளும்
நிறைந்திருக்கும் உன்
மூச்சுக் காற்று எல்லாம்
சேர்ந்து பேசட்டும்...
இனி அவை எல்லாம் பேசட்டும்....
நான் பேசுவதை
நிறுத்திக் கொள்கிறேன்.
••
••   
சோர்ந்து
சொக்கி நிற்கிறது
கண்கள் !
அசந்து அப்படியே
தூங்கிப்போவேன்
நான்...
கொஞ்ச நேரத்தில் .....
இந்த நாளின் கடைசிக்
கவிதை நீ !
கடைசி சந்தோஷம்
நீ என்கிற
பெருமிதத்தோடு ! ...
••
••
முகம் மறைத்துத்
தரை பார்த்து
நாணிச் சிரிக்கிறாய் !
கூட்டம் கூட்டமாய்
தரைதட்டி
ரசித்துப் பார்க்கிறது
விண்மீன்கள் !
ஹ்ம்ம்...
நீயென்றால்
உன் சிரிப்பென்றால்
யாருக்குத் தான்
பார்க்கப் பிரியமில்லை !


      Connect me through Facebook @ : பிரபாகரன் சேரவஞ்சி
••
••  
குருதியின்
அலைகளில்
பேரன்பின்
பிரிவொன்று
மிதந்து வருகிறது...
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரும் உறைந்து
கொண்டிருக்கிறது !
••

••
எப்பெரும்
வெறுப்பின்
அனலையும்
அணைத்துத்
தணிக்கவல்லது..
அன்பின் பெருமழை!
••


••
விதவிதமாய்
நூறுவரம்
கேட்பேன்..
எதைக்கேட்டாலும்
அன்பையே
தருவாய்...!
எது வரம்
எது தேவை என்று
கேட்கிற பக்தனுக்குத்
தெரியாவிட்டாலும்
கொடுக்கிற
சாமிக்குத் தெரியும்!

••


••
புறக்கணிப்பின் 
நெஞ்சிலும் 
அன்புக்கு ஒரு வீடுண்டு , 
அங்கும் கொஞ்சம் 
நிழலுண்டு !
••


••
உன் ஒவ்வொரு 
நொடிப்பொழுதின் அன்பையும்
நெஞ்சில் நிறுத்திக்
 கூட்டிப் பார்க்கிறேன்...
ஒன்றும் ஒன்றும்
நூறாகிறது !!
நீதரும் ஒவ்வொன்றும் 
வரமாகிறது!
••


••
பழிக்கும் வஞ்சத்துக்கும் 
பொய்க்கும் 
கை கொடுக்கும் வாழ்க்கை..
உண்மைக்கும் அன்புக்கும் 
உனக்கும் 
உயிரையே கூட கொடுக்கும் !
கொஞ்சம் பொறுத்திரு..
காலத்தின் வாஞ்சை நிழல் 
உன் பக்கம் தான் 
வந்து கொண்டிருக்கிறது !


••

••
எனக்கான 
இன்பத் தேடல் 
ஆத்ம திருப்தி 
நித்திய சுகம் 
சுத்த சந்தோஷம் 
ஆறுதல்
நோய் தீர்க்கும் மருந்து
எல்லாமே நான்
பிறர் மீது வைத்திருக்கும்
அன்பில் தான்
கலந்திருக்கிறது !
ஆதலால் அன்பு செய்கிறேன் !
••
பிரபாகரன் சேரவஞ்சி




••
என் வாழ்க்கை நீ என்கிறேன் 
என்னை வாழ வைக்க 
வேண்டும் என்கிறாய் !

அவ்வளவு தான் நான் சொன்னதும் 
நீ சொன்னதும் ...
ஒரு கவிதை சுமக்கப் 
போகும் உண்மையின் அளவும் 
ஆழத்தின் அளவும் 
இதைவிடவா அதிகம்
இருக்கப் போகிறது !?

"என்னை வாழ வைக்க
வேண்டும்...."

அநேகமாக
தேசத்தின் ஆகச் சிறந்த
வாஞ்சை மிகு
கவிதை நீ உதிர்த்த இந்த
வார்த்தைகளாகத் தான் இருக்கும் !
••

பிரபாகரன் சேரவஞ்சி


••
என் தோள்களில் 
மெய்மறந்து 
கிடக்கிறாளே..
யாத்தே... 
கடவுளுக்கு 
என் மேல் இவ்வளவு 
பிரியமா !! 
••


••
போகவா ?
ஹ்ம்ம் போ ...
போ'ன்னா 
அப்டியே போய்ர கூடாது !
கொஞ்ச நேரம் 
இப்டியே கேட்டுட்டே 
இருக்கனும் !
அப்புறம் போவேனாம்'ன்னு 
சொல்லிருவேன்..
அப்புறம் இங்கயே இரு !

••




அன்பின் மழையில் நனைகிறேன் !
நெஞ்சை சில்லிட்டுப் போகிற
எந்தத் துளி நீ என்று சொல்ல ?
எல்லாம் நீ தான் !


அடர் சோகங்கள்
அத்தனையும்
மென்றுவிழுங்கி.. 
ஒரு சிரிப்பை
ஊருக்குப் பரிசளிக்க 
அன்பால் மட்டுமே
முடியும் !






••

தீண்டி என் 
தோள்களுரசி.. 
ஆடி என் 
நெஞ்சில் வீழ்ந்து 
அத்தனை சுகமாய் 
வாழ்விக்கும்.. 
உன் சுவாசத்தின் 
பிணைப்பின்றி 
தனியே ஒரு 
பயணம் !
பயணமா இது ?
மரணம் ! 
••

      Connect me through Facebook @ : பிரபாகரன் சேரவஞ்சி





உருகிச் சிரிக்கிறாள் ...
உறைந்து பார்க்கிற
என் ஒவ்வொரு துடிப்பும் 
ஒத்திவைப்புத் 
தீர்மானம் போட்டு 
நெஞ்சை விட்டு 
வெளியேறுகிறது ! 
இருந்தும் வாழ்கிறேன் !
சாகடிக்கும் சிரிப்பு எதுவோ 
அதுவே தான் 
வாழவைக்கிற சிரிப்பும் கூட !~ :) 




என்னைத் தவிர 
உன் புன்னகையை 
ஜெயிக்கிற 
எதுவானாலும் 
யாரானாலும் 
கண்மூடித்தனமாய் 
கோபிக்கிறேன் !
வெறுக்கிறேன் !
பெரும்பாலும் 
பேசாமல் கிடக்கிற அன்பு 
இருப்பு கொள்ளாமல் 
இப்போதெல்லாம் 
ஏதேதோ அற்ப உணர்வுகளோடு 
சண்டையிட்டுக் கிடக்கிறது !
இனி இப்படித் தான் !





எல்லா படைப்புகளும் 
குழந்தையாகிப் 
பணிந்துருகி 
மண்டியிட்டு
வணங்கும்
ஒரே கோவில் 
'அன்பு' !
கோடி லட்சம் 
தெய்வங்களும் 
குழந்தையாகிக் 
காட்சிதரும் 
ஞானபீடம் 
'அன்பு' ! 




நீயில்லாத நான் 
யாரென்று 
கேட்காதே... 
இதுதான் என்று 
சுட்டிக் காட்ட 
எதுவும் இருக்கப் 
போவதில்லை !






எனக்கான 
அழகான 
அடையாளம் 
தேவதைகளின் 
கடவுள் 
கொடுத்த காதல்
அது நீ !
      Connect me through Facebook @ : பிரபாகரன் சேரவஞ்சி






உலகத்தின் 
ஒருநுனியில் 
சிறு துளியாய் நான் 
வீழ்ந்ததன் முழு நோக்கம் 
நீயாய்த் தான் இருப்பாய் !
 




வெறுப்பெனும் 
விசமுறித்து 
அன்பெனும் 
மருந்தாகும் 
செங்காந்தள் நீ !




வேறாரையும் 
அதிர வைக்கும் 
உன் கோபம் 
என்னை மட்டும் 
குளிர வைப்பது 
காதலால்...!



ஒரு 
பெண் நெஞ்சில் 
ஒளிந்திருக்கும் 
பேரழகு அன்பு !
அன்பிற்குள் 
ஒளிந்திருக்கும் 
அத்தனையும் நீ!
ஒரு சிறு துளியாய் 
சென்று சேர்ந்துஉன் 
தாய்வயிற்றில் நீ 
வீழ்ந்த போதும்
இன்றிருக்கும் 
இதே காதல் 
அன்றுமெனக்கு 
இருந்திருக்கும் !
என் உயிரில் 
ஒட்டப்பட்டிருக்கும் 
ஒரே முகவரி நீ !
என்னையன்றி யாருன்னை 
அறிவார் !?



எங்கெல்லாம் 
மழை அடிக்குதோ 
அங்கெல்லாம் 
பரவிக்கிடக்கும் 
நின் பேரன்பின் ஈரம் !



••
என்ன பேசுவதென்றும் 
என்ன கேட்பதென்றும் 
தெரியாமல் 
சில நொடிகள் 
உன்னை அணைத்துக்கொண்டு மட்டும் 
திரும்பி நடந்தேன் !
என் கண்கள் பேசிய அன்பை 
உன் கண்கள் புரிந்து கொண்டது 
அதற்குமேல் நான் என்ன பேச ?
••


••


இளைப்பாற 
நிழல் தேவை இல்லாத 
குளிர் இரவிலும் 
அவசியம் தேவை... 
நின் பேரன்பின் பெருநிழல் !!
••




கடலளவு காதல் 
கையளவு வார்த்தைகள் 
என்னோடு வந்துவிடு 
பேசிப் பேசிக் 
கடலைத் தீர்த்து 
எல்லாம் காதலாய் 
மாற்றி விடலாம் !


      Connect me through Facebook @ : பிரபாகரன் சேரவஞ்சி



2 comments:

  1. as usual fantastic prabha....
    by dhivi

    ReplyDelete
  2. கவிதைகள் மிக அருமை நண்பா! :)

    ReplyDelete