Tuesday, July 6, 2010

செல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்






















ஊருக்கே விடிந்தாலும்
உனக்கு மட்டும்
விடிந்தே தொலையாதே!?"

என்ற என் அன்னையின்
இருவரி சுப்ரபாதத்துடன்
இனிதே தொடங்கியது
நேற்றைய நாள் ! 

எல்லா பாடல்களையும் கேட்டு
மனதிற்குள்ளேயே சிரித்துவிட்டு
போர்வை விளக்கினேன் !

அங்குமிங்கும் நட்டுவைத்த
நாற்றைப்போல நிமிர்ந்து
நின்றுகொண்டிருந்த தலைமுடியை
அரைநிமிடம் சரி செய்தும்
அடங்கவில்லை அது !

போராடியது   போதும்
பொங்கி எழு என்று
எப்படியோ எழுந்துவிட்டுத்
திரும்பினேன்!

அடக்கொடுமையே!
 யாரோ ஒருத்தி
என் பின் அமர்ந்துகொண்டு என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாள்!

சிரிப்பை மறைக்க அவளுக்கு
ஒரு கைக்குட்டை போதவில்லை
போலத்தான் தெரிந்தது!

தூங்கிக்கொண்டிருக்கும் என்
அத்தனை அசைவுகளையும்
அசராமல் பார்த்து சிரிப்பதற்கே
வந்திருப்பாள் போல!

சும்மா சொல்லகூடாது !
செம அழகி தான் அவ !

அப்பா..! சாமி!
எப்படியோ அவளை கடந்து சென்று
குளியலறைக்குள் நுழைந்து
தாளிட்டுக்கொண்டேன்.!

குளியலறைக் கண்ணாடி
காட்டிய என் முகம்
என்னைக் கண்டபடி கிச்சு கிச்சு
மூட்டி சிரிக்க வைத்தது!

என்னை மறந்து நானே
என்னை சிரிக்கவைத்து விட்டேன்!

பின் ரொம்பநேரம் 
வழக்கம் போலவே
வெட்டியாய் என் கணினியின் முன்
தீர்ந்து கொண்டிருந்தது !

சோறு , காப்பி , டீ, ஏதும்
கிடைக்காது போலத்தான்
தெரிகிறது இன்று!

சமையற்கட்டில் ,
என் சுப்ரபாதத் தாயும் .,
என் திருப்பள்ளி எழுச்சியை
ரசித்த ஆண்டாளும்
அரங்கேற்றிய அரட்டையில்
என் பசி ஒரு பத்துப் பதினைந்து
மயில்களுக்கு அப்பால் போயிருக்கும் !

ஆனால் ஏனோ அந்த
முகம் தெரியாத
அழகிக்கு மட்டும்
அத்தனை உபசரிப்புகள் !

எல்லாம் முடிந்து
அவள் கிளம்பிய பின் கேட்டேன் !

"யாரும்மா அந்த புள்ள ?" என்று !
"தூரத்து சொந்தம் டா" என்று சொன்னார்!

சரிதான் !
"நிலவு" ஒரு வகையில்
தூரத்து சொந்தம் தானே!

3 comments:

  1. ஊருக்கே விடிந்தாலும்
    உனக்கு மட்டும்
    விடிந்தே தொலையாதே!?"
    ஆரம்பமே அசத்தல் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. மறுமொழிப்பெட்டியில் உள்ள 'Word verification 'இப்போது நீக்கப் பட்டுவிட்டது ! சங்கர் அண்ணா! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. 'creative blogger' சௌந்தர் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete